பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்ராயண்புராவை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 60). இவர் கர்நாடக அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது நண்பர்கள் ருத்திரசாமி (60), பெங்களூரு வடக்கு ஈரண்ணா படாவனேயை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் (50), சாந்த மூர்த்தி (55), சீனிவாஸ் (55), சிதம்பர ஆச்சாரி (53). நேற்று முன்தினம் இவர்கள் பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா மாவட்டம் சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். நேற்று அதிகாலை அவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் பெங்களூருவுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சவதத்தி போலீஸ் எல்லைக்குட்பட்ட சபாரா கிராமத்தில் வந்தபோது, சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரியை கார் டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன், உள்ளிருந்த 5 பேர் படுகாயம் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விரைந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்ரதுர்கா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்துக்கு கார் டிரைவரின் அதிவேகமே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தால் சித்ரதுர்கா-பெங்களூரு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.