தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை மார்ச் மாதத்துக்குள் நியமிக்காவிட்டால் மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைக் கூட்டம், அதிமுக சார்பில் முதன்முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கட்சி அளவிலான 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அந்ததந்த மாவட்டங்களில் தலா 100-க்கும் மேற்போட்டோர் என சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்துங்கள். கட்சியினர் யாரும் உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. சமூக வலைத்தளங்களிலும் பதிவிடக்கூடாது. அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. கூட்டணி விவகாரம் தொடர்பாக யாருடனும் கட்சி நிர்வாகிகள் விவாதிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது. கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும். கட்சி அறிவுறுத்தல்களை மீறினால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சி நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களில் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். காலி இடங்களில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். இளைஞரணியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர் அணியில் அதிக அளவில் விளையாட்டு வீரர்களை சேர்க்க வேண்டும்.
ஏற்கெனவே அறிவித்தபடி, அனைத்து வாக்குச்சாவடி அளவிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களாக 6 ஆண்கள், 3 மகளிர் என தலா 9 பேரை மார்ச் மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும். இதை செயல்படுத்தாக மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு மாவட்ட செயலாளர் கூட்டங்களைத் தான் பழனிசாமி கூட்டுவார். ஆனால் முதன்முறையாக காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட வாரியாக, ஏராளமான பிரதிநிதிகளுடன் பழனிசாமி கலந்துரையாடியது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.