காஷ்மீரின் கதுவா பகுதியில் காணாமல்போன 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். மூன்று பேரையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
காஷ்மீரின் ஜம்மு பகுதி கதுவா மாவட்டம், பிலாவர் அருகேயுள்ள சுராக் கிராமத்தைச் சேர்ந்த தர்சன் சிங் (40) யோகேஷ் சிங் (32), வருண் சிங் (15) ஆகியோர் கடந்த 6-ம் தேதி உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக சென்றனர். டேகோடா கிராமத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வனப்பகுதி வழியாக சொந்த ஊரான சுராக் கிராமத்துக்கு அவர்கள் திரும்பினர். ஆனால் 3 பேரும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார், மத்திய பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக வனப்பகுதியில் தேடினர். ட்ரோன்கள் மூலமும் தேடுதல் பணி நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி லோகாய் மல்கார் மலைப்பகுதியில் உள்ள குட்டையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி எம்பியும் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கதுவா மாவட்ட வனப்பகுதியில் 3 இளைஞர்களை, தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கதுவா பகுதியின் அமைதியை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
மத்திய உள்துறை செயலாளர் நேரடியாக சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்று நம்புகிறேன். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பிலாவர் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பிலாவர் அருகேுள்ள கோகக் கிராமத்தை சேர்ந்த ஷாம்ஷெர் (37), ரோஷன் (45) ஆகியோர் வனப்பகுதிக்கு விறகுகளை சேகரிக்க சென்றனர். இருவரும் வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். அவர்களின் மரணத்துக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவர்களை தீவிரவாதிகள் கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம்.
தற்போது இதே பகுதியை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர விசாரணை நடத்த வேண்டும். எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அண்மையில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினோம். தேவைப்பட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பிலாவர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.