புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியில் ரூ.22 கோடியில் ‘ராமாயண் வாட்டிகா’ எனும் பெயரில் ஒரு புதிய அழகான பூங்கா 6 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.
இப்பூங்காவில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்படுகிறது. உலகின் மிகப்பெரிய குஜராத்தில் வல்லபபாய் படேல் சிலையை வடித்த பத்ம ஸ்ரீ ராம் சுத்தார் இந்த சிலையை வடித்துள்ளார். ராமர் கடந்த சித்ரகுட், கிஷ்கிந்தா, துரோணகிரி உள்ளிட்ட 6 வனப்பகுதிகளின் 60 சிற்பக் காட்சிகளும் பூங்காவில் வடிவமைக்கப்படுகின்றன.
பரேலி வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த பூங்காவை அதன் துணைத் தலைவர் அதிகாரி மணிகண்டன் அமைத்து வருகிறார். பூங்கா பணிகள் முடியும் தருவாயில் அதற்குள் ஒரு மலர்க் கண்காட்சிக்கும் இவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கண்காட்சியில் ராமாயணத்தில் ராமர் கடந்து சென்ற வனத்தில் பூத்த மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டன. முழு தோட்டமும் லட்சக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மலர்க் கண்காட்சி நேற்றுடன் முடிந்தது. இதை நடத்திய தமிழரான அதிகாரி மணிகண்டனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
இந்த பூங்காவில் பல மாதங்களுக்கு முன்னர் சுமார் 1,600 பூஞ்செடிகள் நடப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர், சீதை, ஹனுமர் உள்ளிட்ட கடவுள்களின் வடிவங்கள் மலர்களால் அலங்கரித்து காட்சியில் இருந்தன. இதற்காக சுமார் 50,000 வகைப் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. சிவபெருமானை ராமர் புகழ்ந்து பாடும் வகையில் பாபா கேதார்நாத் கோயிலின் மாதிரி, மலர்களால் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நெய்வேலியை சேர்ந்த தமிழர் அதிகாரி மணிகண்டன் ஐஏஎஸ் கூறும்போது, “ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ராமாயண் வாட்டிகா அமைக்கப்படுகிறது. இன்னும் 3 மாதங்களில் திறக்கப்பட உள்ள பூங்காவில், தற்போதுநடத்திய மலர்க் கண்காட்சி, இனி ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரிக்காக 3 நாட்கள் நடைபெறவுள்ளது” என்றார்.