Champions Trophy 2025: துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக தோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் தலைமையில் வென்றுள்ளது. கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதன் பிறகு தற்போது மற்றொரு ஐசிசி கோப்பையை வென்று பலம் வாய்ந்த அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து
இந்த தொடர் முழுவதும் மற்றொரு பலம் வாய்ந்த அணியாக நியூசிலாந்து கருதப்பட்டது. இதனால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையான ஃபைனல் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற கேப்டன் சாண்டனர் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரன் 37 ரன்களும், டேரில் மிட்செல் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
கேப்டன் ரோகித் சர்மா அசத்தல்
எளிதான இலக்கை எதிர்த்து விளையாடினாலும் 49 வது ஓவரில் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி எதிர்பாராத விதமாக ஒரு ரன்னுக்கு அவுட் ஆக, அதன் பிறகு களமிறங்கிய ஸ்டேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினர். இதனால் ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யார் யாருக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும்?
சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் 8 அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடி ஆகும். ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 1.1 கோடி பரிசு வழங்கப்படும். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 2.9 கோடி பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து அணிக்கு ரூ. 10 கோடி பரிசு தொகை வழங்கப்படும். அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ. 4.6 கோடி பரிசு வழங்கப்படும். சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ. 20 கோடி பரிசு கிடைக்கும். இது தவிர மத்திய அரசு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசு தொகைகளை வழங்கலாம்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவாரா பும்ரா? வெளியான அதிர்ச்சி தகவல்!