இன்றைய காலகட்டத்தில் Work Life Balance என்பது அதிகம் பேசப்படும் சொல்லாடலாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் தங்களது மன நலன் குறித்து ஆழ்ந்த அக்கறை கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
இளம் தலைமுறையினர் தங்களது வேலை-வாழ்க்கை சமநிலையைக் காப்பதற்காக உருவாக்கியதுதான் மைக்ரோ-ரிடயர்மென்ட் என்ற கான்சப்ட்.

Micro Retirement
நம் அன்றாட சுழற்சியைக் கடந்து வாழ்க்கையை அனுபவிக்கவும், உலகை ஆராயவும், உடல் நலனைப் பேணவும் சுருக்கமாக நம்மை நாமே ரீசார்ஜ் செய்துகொள்ளவும் வேலையிலிருந்து சிறிய இடைவெளி எடுப்பதுதான் மைக்ரோ-ரிடயர்மென்ட்.
ஓய்வெடுப்பதைத் தாண்டி உங்கள் தனிப்பட்ட இலக்குகள் ஆர்வங்களுக்கு நேரம் செலவழிப்பதற்காக, உங்கள் வாழ்வின் உண்மையான லட்சியத்தை நோக்கி நகர சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை வேலையிலிருந்து இடைவேளை எடுக்க இளம் தலைமுறையினர் திட்டமிடுகின்றனர்.
இதனைச் சாத்தியப்படுத்த, முன்கூட்டியே இடைவேளை நாட்களுக்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைக்கலாம் அல்லது வேலையில் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.

Micro Retirement பிரபலமாவது ஏன்?
இன்றைய வேகமான வேலைக் கலாசாரம், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் வேலை பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இளம் தலைமுறையினர் இதுவரையில்லாத மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
GenZ தலைமுறையினர் தான் வேலை பார்க்கும் இடங்களில் அதிகம் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதேநேரம், இதற்கு முந்தைய மில்லேனியல் தலைமுறையினர் அதிகம் சோர்வை அனுபவிக்கின்றனர்.
மைக்ரோ ரிடயர்மென்ட் வேலை பந்தயத்திலிருந்து பின்வாங்கி, முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து, மீண்டும் தொடங்க அனுமதிப்பதனால், நீண்ட கால சோர்விலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. பொருள் செல்வத்தை விட, வாழ்க்கை அனுபவங்களை முன்னுரிமைப்படுத்தும் இளம் தலைமுறையினர் இதனைச் சரியான வழி எனக் கருதுகின்றனர்.
உங்கள் ரிடயர்மென்ட் வயதுவரை நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதை விட, பயணம் செய்ய, விரும்பும் செயல்பாடுகளில் நேரம் செலவழிக்க, அன்பானவர்களுடன் நேரம் செலவிட அவ்வப்போது ரிடயர் ஆகவேண்டும் எனக் கருதுகின்றனர்.

மைக்ரோ ரிடயர்மென்ட் மூலம் மனநலன் மேம்படுவதுடன், பணிக்குத் திரும்பும் ஊழியர்களின் உற்பத்தித் திறனும், திறமைகளும் மேம்பட்டிருக்கும் எனக் கூறுகின்றனர்.
ஆனால் இந்த திட்டத்தில் இரண்டு பெரிய சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு இடைவேளை அளிக்க முன்வருவதில்லை. மற்றொன்று இடைவேளை எடுக்கும் காலத்தில் ஊழியர்களுக்கான பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
எனினும் மைக்ரோ ரிடயர்மென்ட்தான் வேலை கலாசாரத்தின் எதிர்காலமாக இருக்கும் என்றும் சிலர் கணிக்கின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
