18 ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) அதிரடியாக கைது செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் உல்பத் ஹுசைன் (52). இவர் படித்துமுடித்த பின்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் பயிற்சி பெற்று திரும்பினார். உ.பி. மொரதாபாத்தில் இவர், நான்கு இளைஞர்களுடன் தங்கியிருந்து தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டபோது கடந்த 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் பரேலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த உல்பத்துக்கு 2008-ம் ஆண்டு ஜாமீன் கிடைத்தது. அதன்பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக நிரந்தர (30 ஆண்டுகள்) பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரது தலைக்கு ரூ.25,000 பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் உள்ள பசலாபாத் கிராமத்தில் உல்பத் ஹுசைன் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு அதிரடி படையினரும், மொரதாபாத் போலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் உல்தப் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.