பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ஒருபோதும் தானாக முன்வந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் விட்டுக்கொடுக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால், ஒருநாள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று நான் நம்புகிறேன்.
அந்தப் பகுதி வளர்ச்சி அடைய வேண்டும், நலத்திட்டங்களைப் பெறவேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுப்பர். வருங்காலத்தில் இந்தியாவுடன் அவர்கள் இணைந்து வாழ பாகிஸ்தானின் விருப்பத்தைக் கூட எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி, அரசியலில் உருவாக்கப்பட்ட நம்பகத்தன்மை நெருக்கடியை நிவர்த்தி செய்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. தொகுதி எல்லை மறுவரையறை தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொகுதி வரையறை விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தடைகளை உருவாக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இதில் அவருக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அவர் அதை ஒரு பொருத்தமான இடத்தில் எழுப்பலாம்.
வழக்கமாக தொகுதி எல்லையை மறுவரையறை செய்யும்போது தொகுதிகளின் எண்ணிக்கை கூடும். எனக்குத் தெரிந்த வரையில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கையும் கூடும் என்றே நான் நினைக்கிறேன்.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணிக்காக்க இந்தியா விரும்புகிறது. நாம் நமது நண்பர்களை மாற்ற முடியும். ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது என்று மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் கூறுவார். எனவே, வங்கதேசத்துடன் நல்லுறவை வளர்க்க நாங்கள் விரும்புகிறேன்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும். இதை நாம் முன்கூட்டியே செய்திருக்கவேண்டும். இந்தத் திட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தை நாம் சேமிப்பதோடு, கணிசமான நேரத்தையும் மீதம் செய்ய முடியும். அதேநேரத்தில் நல்லாட்சியைக் கொண்டு வரவும் முடியும். மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் மஹிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்ததாக டெல்லி அரசை நான் பாராட்டுகிறேன். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் டெல்லி அரசு அமல்படுத்தும்.
நமது அரசு ஒரு மாநிலத்தில் இருந்தாலும் சரி, மத்தியில் இருந்தாலும் சரி, நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.