“எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன்” – கனிமொழி எதிர்ப்பை அடுத்து தர்மேந்திர பிரதான் வருத்தம்

புதுடெல்லி: “தமிழக அரசை, தமிழக எம்பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில், தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது, “பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு பிறகு யு டர்ன் அடித்துவிட்டது. தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தில் இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள். மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.” என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பி கனிமொழி பேசினார். அவர் தனது உரையில், “இன்று நான் வலியோடு இருக்கிறேன். அமைச்சரின் பதில் வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு, தமிழக எம்பிக்கள், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் கூறி இருக்கிறார்.

நாங்கள் எஸ்எஸ்ஐ நிதி தொடர்பாக அமைச்சரை சந்தித்தோம். தமிழக அமைச்சரும் எங்களோடு இருந்தார். தேசிய கல்விக் கெள்கையில் எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதை முழுவதுமாக எங்களால் ஏற்க முடியாது. ஏனெனில், மும்மொழிக் கொள்கை தமிழக அரசால் ஏற்க முடியாது.

தமிழக முதல்வர், அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக எங்களால் ஏற்க முடியாது. நிதியை எங்களுக்கு ஒதுக்குங்கள் என முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக எம்பிக்கள் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை.” என தெரிவித்தார்.

கனிமொழியின் உரைக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “எனது மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர், எனது நெருங்கிய சகோதரி கனிமொழி 2 விஷயங்களை எழுப்பி இருக்கிறார். தமிழக அரசை, தமிழக எம்பிக்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், நான் எனது அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் பேசியது எவரது மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.

இரண்டாவதாக, பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக அவர்கள் என்னோடு பல முறை பேசி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டார்கள். தமிழக முதல்வரும் ஒப்புக்கொண்டார். பிறகு அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள். தற்போதும் சொல்கிறேன். இந்தநிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பாஜக அல்லாத மாநிலங்களோடு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியை பெற்று வருகிறார்கள். தமிழ்நாடும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புக்கொண்டால், அவர்களுக்கும் நிதி வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.