ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பாதையும் அடைக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம்-பொன்விளைந்தகளத்தூர் இடையே, ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதி கிராம மக்கள் பணி நிமித்தமாகவும் பள்ளி, கல்லுாரி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் செல்கின்றனர். அப்போது, ரயில்வே கேட் கடந்து தான் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி ஒத்திவாக்கம் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு – ஒத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, 2011-12-ம் ஆண்டு ரூ.30 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே நிர்வாகம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தண்டவாள பகுதியில் மேம்பால பணியை முடித்தது. ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்காமல் இருந்தனர்.
இதனிடையே கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேம்பால பணிக்கு ரூ.26 கோடியே 58 லட்சம் டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே மேம்பால பணி கடந்த 2023 மார்ச் 12-ம் தேதி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொன்விளைந்தகளத்தூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கூறியது: ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேம்பால பணி 60 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் குறித்த நேரத்துக்கு பணி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், பத்து பேர் மட்டுமே பணி புரியும் நிலையில் பணிகள் முடிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணி ஒப்பந்த காலம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டாததால் இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒத்திவாக்கம் ரயில்வே கேட்டை கடந்து பொன்விளைந்த களத்தூர், பொன்பதர் கூடம், வீரகுப்பம், வேண்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், வல்லிபுரம், ஈசூர், எலுமிச்சம்பட்டு, தச்சூர், பூதூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்ல வேண்டிய நிலையில் மேம்பால பணியை காரணம் காட்டி ரயில்வே கேட் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்லாத வகையில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கூட அனுமதிக்கப்படாததால் பல கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.
அவ்வாறு பொன்விளைந்த களத்தூர்- உதயம்பாக்கம் வழியாக உள்ள ரயில்வே கேட்டை கடந்து பொதுமக்கள் செல்ல நேரிடுகிறது. அந்த சாலை சுமார் 15 அடி அகலமே உள்ளதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். ஆனால் காலை மற்றும் மாலை நேரத்தில் அதிகரிக்கும் வாகனங்களால் நெரிசலும் சிரமமும் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்களில் செல்வோருக்கு வயல்களில் விழுந்து சிறு சிறு காயங்களும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் ஒத்திவாக்கம் புதுப்பாக்கம் திருவானைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அறுவடை செய்யும் பட்சத்தில் பொன்விளைந்த களத்தூர் பகுதியில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையத்துக்கு அறுவடை நெல்லை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் ரூபாய் வரை டிராக்டருக்கு சுமை கூலி கொடுத்து சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அலட்சியமாக மெத்தனப்போக்கில் குறைவான பணியாளர்களைக் கொண்டு வேலை செய்வதால் பணிகளை முடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகும். ஏற்கெனவே ஒப்பந்த காலம் முடிந்து 4 மாதம் கடந்துவிட்டநிலையில், மேலும் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு கடும் சிரமத்தை தரும். எனவே பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.