“இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன” – கனடாவின் புதிய பிரதமர் கருத்து

ஒட்டாவோ: இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனை தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியா – கனடா உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமராக வரவிருப்பவருமான மார்க் கார்னி, இந்தியா உடனான கனடாவின் வர்த்தக உறவை பன்முகப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமையின் கீழ் இந்தியா – கனடா இருதரப்பு உறவு மோசமடைந்த நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

59 வயதாகும் மார்க் கார்னி, கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் முக்கியத்துவும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 வரை மட்டும் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அதனால் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ளார் மார்க் கார்னி. அவருக்கான சவால்கள் ஏராளமான சாவல்கள் காத்திருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஊடக உரையாடல் ஒன்றில், “கனடா மீதான அமெரிக்க வரிகள் பிரச்சினையை சமாளிக்க, ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நமது வர்த்தக உறவுகள் பன்முகப்படுத்தப்படும். மேலும், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன. வணிக உறவைச் சுற்றி பரஸ்பர மரியாதை உணர்வு இருக்க வேண்டும். நான் பிரதமரானால், அதைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை எதிர்பார்ப்பேன்” என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகான தனது வெற்றி உரையில், “டொனால்டு ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும் வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்.” என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இரு நாடுகளையும் பாதிக்கும் நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கனடாவின் எந்தவொரு முயற்சியையும் இந்தியா வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த இந்தியர்களுக்கு கனடா முக்கிய இடங்களில் ஒன்றாக இருப்பதால், கனடாவின் புதிய பிரதமருடன் குடியேற்றம் மற்றும் விசா விதிமுறைகள் தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்.

பாதிக்கப்பட்ட இரு தரப்பு உறவு: கனடா பிரதமர் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்தியர்கள் ஈடுபட்டதாக 2023, ஜூன் 18 அன்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டது. கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.