வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியல்களை அரசாங்கம் உருவாக்குவதில்லை என்ற உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்விகளை எழுப்பியுள்ளன” என்று கூறினார்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய், “வாக்காளர் பட்டியலில் சில குறைபாடுகள் இருக்கின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத் மற்றும் பர்த்வான் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஹரியானாவிலும் ஒரே மாதிரியான தேர்தல் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்ட வாக்காளர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல்கள் குறித்த கவலைகளை வெளிப்படுத்த புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையரை திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு சந்தித்தது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியல்களை முழுமையாகத் திருத்த வேண்டும்.

மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரித்தது தொடர்பாக அப்போதே சுட்டிக்காட்டப்பட்டது. ஹரியானாவிலும் இது சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அவர்கள் இப்போது குதிக்க(பட்டியலை மாற்ற) முயற்சிக்கின்றனர். மொத்த வாக்காளர் பட்டியல்களையும் முழுமையாகத் திருத்த வேண்டும். பட்டியல்களில் ஏன் சில தவறுகள் நடந்தன என்பதற்கு தேர்தல் ஆணையம் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.