IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்துவிட்டது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுவிட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இன்னும் சில வாரங்களை கழிப்பார்கள். அடுத்த இன்னும் 12 நாள்களில் அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் தொடங்க இருக்கிறது.
IPL 2025: ஐபிஎல் தொடரின் புதிய விதி
ஐபிஎல் 2025 மெகா ஏலம் அறிவிக்கப்பட்ட போதே, பல்வேறு விதிகளும் அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒரு விதி, மெகா ஏலத்தில் ஒரு அணியால் ஒரு வீரர் எடுக்கப்பட்ட பின்னர் அந்த வீரர் தொடரில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்தால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவது மட்டுமே அனுமதிக்கப்படும்.
IPL 2025: 2 ஆண்டுகள் தடையாகும் ஹாரி ப்ரூக்
அந்த வகையில், ஹாரி ப்ரூக்கை ரூ.6.25 கோடி கொடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், இங்கிலாந்து தேசிய அணிக்காக தான் தயாராக வேண்டியிருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி ப்ரூக் அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு ஐபிஎல் தொடரில் இருந்து 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம். கடந்தாண்டும் இவர் இதேபோல் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது நினைவுக்கூரத்தக்கது.
IPL 2025: ஹாரி ப்ரூக்கிற்கு பதில் இந்த 3 பேர்
இவரை ரூ.6.25 கோடி கொடுத்து எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளது எனலாம். இதனால் ஹாரி ப்ரூக் இடத்தில் ஒரு வெளிநாட்டு பேட்டரை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் டெல்லி உள்ளது. அந்த வகையில், டெல்லி அணி ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக இந்த 3 பேரில் ஒருவரை முயற்சிப்பது அதிக பலனை தரலாம். அந்த 3 பேரை இங்கு காணலாம்.
IPL 2025: பென் டக்கெட்
சமீபத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து தொடரிலும் சரி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சரி பென் டக்கெட் நல்ல பார்மிலேயே இருக்கிறார். துணை கண்ட சூழலுக்கு தனது ஆட்டத்தை தகவமைத்துக்கொள்ளும் திறனை பென் டக்கெட் பெற்றிருக்கிறார். மேலும் அவர் எளிமையாக சிக்ஸ் அடிக்கக் கூடிய திறனை பெற்றிருக்கிறார்.
இருப்பினும் இவர் ஓப்பனிங் வீரர் என்பது மட்டுமே ஒரு பிரச்னை. ஏனென்றால், ஓப்பனிங்கில் ஏற்கெனவே கேஎல் ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாப் டூ பிளெசிஸ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். எனவே பென் டக்கெட்டை எடுப்பதில் ஒரே ஒரு சிக்கல் உள்ளது. இவரது அடிப்படைத் தொகை ரூ.2 கோடி ஆகும்.
IPL 2025: அலெக்ஸ் கேரி
இவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிரட்டி வந்தாலும் இவர் மீது ஐபிஎல் அணிகள் பெரியளவில் நம்பிக்கை வைத்ததே இல்லை எனலாம். ஆனால் இந்த முறை இவரை நம்பி டெல்லி அணி எடுத்தால் நிச்சயம் மிடில் ஆர்டரில் தூணாக இருப்பார்.
நம்பர் 3, நம்பர் 4இல் இவருக்கு புது ரோலை கொடுக்கலாம். இடது கை வீரர் என்பதால் கூடுதல் சாதகமும் டெல்லிக்கு கிடைக்கும். விக்கெட் கீப்பங்கும் செய்வார் என்பதால் டபுள் ஜாக்பாட் கிடைக்கலாம். இவரது அடிப்படை தொகை ரூ.1 கோடி தான்.
IPL 2025: டிவால்ட் பிரேவிஸ்
மும்பை அணி இவரை அணிக்குள் எடுத்து பல வாய்ப்புகளை வழங்கியது. இருப்பினும் இவரால் இந்திய மண்ணில் பெரியளவில் சோபிக்க இயலாத காரணத்தால் அவரை அணியில் இருந்து விடுவித்தது. கடந்த ஏலத்திலும் அவரை யாரும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது SA20 டி20 லீக்கில் சிறப்பாக விளையாடியிருந்தார். அவரை பேட்டிங்கில் எந்த இடத்திலும் நீங்கள் விளையாட வைக்கலாம். ஆட்ட சூழலுக்கு தகுந்தாற்போல் விளையாடக்கூடியவர் இவர். இவரது அடிப்படைத் தொகை ரூ.75 லட்சம் தான்.