பாட்னா: பிஹாரின் அர்ரா நகரில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் திங்கள்கிழமை அதிகாலை ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து ரூ. 25 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அர்ரா நகரின் கோபாலி சௌக் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷோரூம் மேலாளர் குமார் மிருத்யுஞ்சய், “ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. செயின்கள், நெக்லஸ்கள், வளையல்கள், சில வைர நகைகள் என ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
காவல் துறை அதிகாரிகளின் அலட்சியமே இந்தக் கொள்ளை சம்பவத்துக்கு முக்கியக் காரணம். நாங்கள் காவல் துறைக்கு போன் செய்தோம். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவம் காலையில் நடந்துள்ளது. இரவில் அல்ல. இருந்தும் போலீஸார் துரிதமாக செயல்படவில்லை.
குறைந்தது 8 கொள்ளையர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலையில் ரிவால்வரால் தாக்கியதில் ஷோரூமின் இரண்டு நிர்வாகிகள் காயமடைந்தனர். நகைகளோடு, கவுன்டரில் இருந்த பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்” என தெரிவித்தார். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதில், 8-9 கொள்ளையர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை மிரட்டுவதும், இதையடுத்து, அவர்கள் தங்கள் கைகளை தூக்கி அச்சத்துடன் நிற்பதுமான காட்சிகள் வெளியாகி உள்ளளன. இந்த மிகப் பெரிய கொள்ளை சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.