சென்னை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். ரோகித் சர்மா ஆட்ட நாயகனாவும், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை வருண் சக்கரவர்த்திதான் தொடர்நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: “எது சொன்னாலும் நடந்திருந்தாலும் என்னுடைய பார்வையில் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன். இத்தனைக்கும் அவர் தொடர் முழுவதும் விளையாடவில்லை. அந்தளவுக்கு அவர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒருவேளை அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டி வேறு மாதிரி சென்றிருக்கும்.
ஒருவேளை நான் அந்த விருதின் தேர்வாளராக இருந்தால் அதை வருணிடம் கொடுத்திருப்பேன். அவர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி உள்ளார். கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை அவர் எப்படி எடுத்தார் என்பதைப் பாருங்கள். பிலிப்ஸ் தன்னுடைய ஸ்டம்ப்புகளை முழுமையாக மறைத்துக் கொண்டார். அதை உடைப்பதற்காக வருண் கூக்லி பந்தை வீசினார். என்னுடைய பார்வையில் வருண்தான் தொடர்நாயகன். அவர் அந்த விருதை பெறுவதற்கு தகுதியானவர்” என்று கூறினார்.
அவர் கூறுவது போலவே இந்த தொடரில் முதல் 2 லீக் ஆட்டங்களில் விளையாடாத வருண் மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதும் அடங்கும். அது போக அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.