விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அப்பல் நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது ஒவ்வொரு கூட்டத்தில் பேசும்போதும் மக்கள் தொகை பற்றி பேசுகிறார். நம் நாட்டில் 140 கோடி மக்கள் தொகை இருந்தாலும், வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இதை கணிசமாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற தொகுதிகள் குறையாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட இதைத்தான் வலியுறுத்துகிறார்.
எனவே, ஆந்திராவில் இனி 2 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளுங்கள். 3-வதாக பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 பரிசாக வழங்குவேன். ஒரு வேளை ஆண் குழந்தை பிறந்தால் ஒரு பசு மாடு பரிசாக வழங்குவேன். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியிலும் அவரது சொந்த கட்சியினர் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்த எம்.பி., ஆண் குழந்தை பிறந்தால் மட்டும் ஏன் பசு மாடு வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஆண் பிள்ளை மாடு மேய்க்கத்தான் உதவுவான் என எம்.பி. முடிவு செய்து விட்டாரோ என எதிர்க்கட்சியினர் கேலி செய்து வருகின்றனர்.