பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று; 2 வாரங்களில் பரிசோதனை: பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் விளக்கம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றுப் பொருட்களை வழங்க சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், அப்பொருட்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பரிசோதித்து பார்க்க இருப்பதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், சென்னையை சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக், பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மக்கும் தன்மையற்றவை. இவற்றை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கும் பால் பாக்கெட்டுகளை கையாள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகளவு பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது. அதில் 7 சதவீதம் ஆவின் பால் பாக்கெட்டுகளாகும். இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதில்லை. எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்க தடை விதிக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கில், “கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலில் பால் விற்பனையை மேற்கொள்ள அதிக செலவாகும். அத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை” என ஆவின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அதற்கு “வெளிநாடுகளில் கண்ணாடி பாட்டில் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதை ஏன் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது?” என அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, “பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுக்கு மாற்று பொருள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். மாற்றுப் பொருட்களை வழங்க சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றை 2 வாரங்களுக்குள் பரிசோதித்துப் பார்க்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு எதிராக நிரந்தர தீர்வை ஆவின் நிர்வாகம் கொடுக்க முன்வந்து, நிலம் மாசுபாட்டுக்கு முடிவுகட்டும் என நம்புகிறோம் எனத் தெரிவித்த அமர்வின் உறுப்பினர்கள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.