கர்நாடகாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரன்யா ராவை காங்கிரஸ் பாதுகாக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக பாஜக ஆட்சியில் ரன்யா ராவ் நிறுவனத்துக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் சோதனையிட்டனர். இதில் ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், முக்கிய பிரமுகர்கள், நகைக்கடை அதிபர்கள் மற்றும் சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுவரை 45 நாடுகளுக்கு அவர் பயணித்துள்ளார். துபாய்க்கு மட்டும் 27 முறை சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 8-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்தனர். முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் உள்ள வீடியோ ஆதாரங்களை சேகரித்து, விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஜாமீன் மறுப்பு: இந்நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது ரன்யா ராவ் தரப்பில், “போலீஸார் அவரை உடல் ரீதியாக தாக்கவில்லை. ஆனால் உணர்வு ரீதியாக காயப்படுத்திவிட்டனர். மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்க வேண்டும்’ ‘என கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
அமைச்சர் ஆதரவு: இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, “கர்நாடக அமைச்சர் ஒருவர் ரன்யா ராவை பாதுகாக்க முயற்சிக்கிறார். காங்கிரஸார் ஊழல் புரிவதற்கு, சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் கூட்டு வைக்கவும் தயங்க மாட்டார்கள்.
அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஒரு பெண்ணால் இவ்வளவு பெரிய அளவில் தங்க கடத்தலில் ஈடுபட்டிருக்க முடியாது. எனவே இவ்வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரித்தால் காங்கிரஸ் அமைச்சர் உட்பட பலர் சிக்குவார்கள்” என்றார்.
12 ஏக்கர் நிலம் ஒதுக்கிய பாஜக: இதற்கு பதிலளித்த கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், “ரன்யா ராவ் வழக்கில் போலீஸ் விசாரணை நேர்மையான முறையில் நடந்து வருகிறது. குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய தேவை காங்கிரஸாருக்கு இல்லை. கடந்த 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் ரன்யா ராவுக்கு சொந்தமான நிறுவனம் இரும்பு கம்பிகள் தயாரிக்க சிரா அருகே 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவினருக்கு ரன்யா ராவுடன் நேரடியாக தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது'” என்று தெரிவித்தார்.
நடிகை ரன்யா ராவ் விவகாரத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக மோதல் ஏற்பட்டுள்ளதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.