சென்னை: “காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நெற்பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வழக்கமாக கிடைக்க வேண்டிய மகசூலை விட 60 விழுக்காடு வரை குறைவான மகசூல் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் விவசாயிகளின் துயரைத் துடைக்க தமிழக அரசு இப்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ஏக்கருக்கு 24 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால், தமிழ்நாடு அரசு வழங்கும் கொள்முதல் விலைப்படி ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.58 ஆயிரத்து 800 வரை வருமானம் கிடைக்கும்.ஆனால், இம்முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்புகளால் ஏக்கருக்கு 9 குவிண்டால் முதல் 15 குவிண்டால் வரை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.22 ஆயிரத்து 50 முதல் ரூ.36 ஆயிரத்து 750 வரை மட்டும் தான் வருமானம் கிடைக்கும். இது போதுமானதல்ல.
ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. தமிழக அரசு வழங்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவு ஆகும். இத்தகைய சூழலில் ஏக்கருக்கு 24 குவிண்டால் விளைச்சல் கிடைத்தால் மட்டும் ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது விளைச்சல் குறைந்து விட்டதால் உழவர்களால் சாகுபடி செலவில் பாதியைக் கூட எடுக்க முடியவில்லை. இயல்பாகக் கிடைக்கக் கூடிய வருமானத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு, அதாவது ரூ.35,000 வரை இழப்பு ஏற்படும்.இதை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் விளைச்சல் குறைந்ததற்கு விவசாயிகள் எந்த வகையிலும் காரணம் அல்ல. நவம்பர் மாதத்தில் சம்பா மற்றும் தாளடி நடவு தொடங்கியதிலிருந்து ஜனவரி வரை மூன்று முறை கடுமையான மழை பெய்து நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் பயிர்கள் அழுகாமல் தப்பித்து விட்டாலும் நெல் மணிகள் உதிர்ந்து விட்டது உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பெரிதும் குறைந்து விட்டது. இது இயற்கையின் தாக்குதல் தான் என்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
மழை மற்றும் வெள்ளத்தால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த இரு ஆண்டுகளாகவே இந்த பாதிப்பு தொடர்கிறது. ஆனால், பாதிப்புகளுக்கு காப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து விட்டன. நடப்பாண்டில் மூன்று கட்டங்களாக நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்ட போதும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது விளைச்சல் குறைந்தது உறுதியாகி விட்ட நிலையில், விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை என்றால் விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறுவதைத் தவிர்க்க முடியாது.
பயிர்க்காப்பீடு செய்வதன் நோக்கமே இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத விதிமுறைகளை வகுத்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரீமியத் தொகையில் 10 விழுக்காட்டைக் கூட காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்குவதில்லை. விவசாயிகளின் வயிற்றில் இவ்வாறு அடிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் லாபத்தில் கொழிக்கின்றன. இதை அரசும் கண்டுகொள்வதில்லை.
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நெற்பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப் படுவதை உறுதி செய்ய தமிழக அரசே தனி பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.