கடலூர்: “பெண் என்பதால் புறக்கணிக்கிறீர்களா..?” – மாநகராட்சி அதிகாரிகளிடம் வெடித்த மேயர் சுந்தரி

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி செலவில் வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச் செல்வன் உள்ளிட்டவர்கள் அங்குச் சென்றனர். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரத்தை கடந்தும், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வரவில்லை.

கடலூர் மாநகராட்சி

அதில் கடுப்பான மேயர் சுந்தரி, “அடிக்கல் நாட்டு விழா என்று அதிகாரிகள் கூறியதால்தான் இங்கு வந்தேன். ஆனால் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அதிகாரிகள் வருவது கிடையாது. நான் செல்போனில் அழைத்தாலும் எந்த அதிகாரிகளும் எடுப்பதில்லை. எத்தனையோ முறை என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள். நானும் போனால் போகிறதென்று பிரச்னை எதுவும் செய்யாமல் சென்று கொண்டிருக்கிறேன். இத்துடன் அதிகாரிகள் வராமல் இருக்கும் நான்காவது நிகழ்ச்சி இது.

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அசிங்கத்தைப் பொறுத்துக்கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறேன்” என்று செய்தியாளர்கள் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட கட்சிக்காரர்களிடம் கூறி நொந்து கொண்டார்.

கடலூர் மேயர் சுந்தரி

அதையடுத்து சிறிது நேரத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம், “மாநகராட்சி திட்டப் பணிகளை துவக்கி வைக்க வேண்டும் என்று நீங்கள்தான் நேரம் குறிப்பிட்டு என்னை வரச் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் யாரும் வரவில்லை. கடந்த நான்கைந்து நிகழ்ச்சிகளாக தொடர்ந்து நீங்கள் இப்படித்தான் செய்கிறீர்கள். நான் பெண் மேயர் என்பதால் என் நிகழ்ச்சிகளை இப்படி புறக்கணிக்கிறீர்களா? வேலை ஆரம்பித்த பிறகு வந்து பார்ப்பீர்களா? அதன்பிறகு அது தப்பு இது தப்பு என்று சொல்வீர்களா?” என்று கடுகடுத்தார் மேயர் சுந்தரி. அதையடுத்து வணிக வளாகப் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் மேயர்.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கடலூர் தி.மு.க நகரச் செயலாளருமான பழக்கடை ராஜாவின் மனைவிதான் மேயர் சுந்தரி. அவரே மாநகராட்சி அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருப்பது ஆளும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.