உடல் எடையைக் குறைப்பதற்காக அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்’டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா(18). இவர் சற்று அதிகமான உடல் எடையுடன் இருந்தார். இதனால் இன்டர்நெட், சமூக வலைதளங்களில் வரும் உடல் எடைக் கட்டுப்பாடு வீடியோக்களைப் பார்த்து `டயட்’டில் இருந்தார்.
சுமார் 6 மாதங்களாக அவர் மிகக் குறைந்த அளவே உணவு எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் வெறும் 24 கிலோவுக்கு அவரது எடை குறைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக அவர் வெந்நீரை மட்டுமே அவர் குடித்து வந்துள்ளார். இதனால் உடல் மிகவும் மெலிந்து, நோயாளி போல மாறினார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அவரை தலச்சேரியிலுள்ள கூட்டுறவு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அனோரெக்ஸியா என்ற உணவுக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அனோரெக்ஸியா என்பது ஒரு உணவுக் குறைபாடு ஆகும். எடை அதிகரித்துவிடும் என்ற பயம் காரணமாக இந்தவகைக் குறைபாடு ஏற்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சாப்பாடு அதிகம் எடுத்துக் கொள்ளாததால் அவரது கல்லீரலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் நாகேஷ் மனோகர் பிரபு கூறும்போது, “18 வயதான இளம்பெண் ஸ்ரீநந்தா கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை ஐசியூவில் வைத்திருந்தோம். 24 கிலோ எடை மட்டுமே இருந்த அவர் படுத்தபடுக்கையாகவே இருந்தார். அவரால் எழுந்திருக்க கூட முடியவில்லை.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, சோடியம், ரத்த அழுத்தம் அனைத்தும் குறைவாகவே இருந்தது. அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. இருந்தபோதும், உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துவிட்டார்” என்றார்.
இதுகுறித்து ஸ்ரீநந்தாவின் உறவினர் ஒருவர் கூறும்போது, “பெற்றோர் உணவு கொடுக்கும்போது அதை ஸ்ரீநந்தா மறைத்து வைத்துவிட்டு சாப்பிடாமல் விட்டுவிடுவார். உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் அவர் வெந்நீரை மட்டுமே குடித்து வந்தார்” என்றார்