புதுடெல்லி,
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நேற்று நாடாளுமன்றத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக நான் தவறான தகவலை தந்ததாக திமுக எம்.பிக்கள், தமிழக முதல்-அமைச்சர் கூறினர். அவையில் தவறான தகவல் தரவில்லை. தமிழக முதல்-அமைச்சரை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட குழந்தைகளின் நலனே முக்கியம். பிம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழகம் ஒப்புதல் தந்தது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேசிய கல்விக்கொள்கையை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம். மொழிப்பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரமாக திமுக கையாள்கிறது. பரிந்துரைப்படியே பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பது பற்றி முடிவு என கடிதத்தில் அரசு கூறியிருந்தது.
தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று திமுக குரல் கொடுக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், அவர்கள் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இலக்கிய சின்னங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் சிறிது கூட முயற்சி செய்யவில்லை என பதிவிட்டுள்ளார்.
பிம் ஸ்ரீ திட்டத்தை தமிழகம் ஏற்றதாகக்கூறி கடிதத்தையும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பகிர்ந்துள்ளார். முதல்-அமைச்சரும், திமுக எம்.பிக்களும் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.