புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மக்களவையில் பேசிய திமுக எம்பி சுமதி எனும் தமிழச்சி தங்கபாண்டியன், பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
இதற்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டிருந்த தர்மேந்திர பிரதான், ஒரு கட்டத்தில் திமுக எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைப்பவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்துப் பேசிய தர்மேந்திர பிரதான், தனது குறிப்பிட்ட அந்த கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று திமுக எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, “தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய மொழி எதிர்பாராதது. இதுபோன்ற மொழியைப் பயன்படுத்தியதன் மூலம் ஒரு மத்திய அமைச்சர், மாநில மக்களை அவமதித்துள்ளார். ஒன்று அவர் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ், திமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறது.” என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “இரு மொழி பாடத்திட்டம் எங்களுக்கு மிகச் சிறப்பானதாக உள்ளது. இதில், தமிழ்நாடு தெளிவாக உள்ளது. எங்கள் மொழி அடையாளத்தைப் பாதுகாக்கிறது. மேலும், வணிகம் மற்றும் அறிவியல் உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் எங்களுக்கு இணைப்பு மொழியாக உள்ளது. மூன்றாவது கட்டாய மொழி எங்களுக்குத் தேவையில்லை. தர்மேந்திர பிரதான் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். என்றாலும், அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நாங்கள் மும்மொழிக் கொள்கையிலும், புதிய கல்விக் கொள்கையிலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். தமிழகக் குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமை இல்லை. நேற்று, அவர் (தர்மேந்திர பிரதான்) மிகவும் மோசமான முறையில் பதிலளித்தார், நாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் கூறினார். அவர் இவ்வாறு பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறினார்.