ரஷ்ய தாக்குதல் காரணமாக, உக்ரைனின் ஆயுத இறக்குமதி 100 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆயுத இறக்குமதியில் மிகப் பெரிய நாடாக இருந்த இந்தியாவை உக்ரைன் பின்னுக்கு தள்ளியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.3 சதவீதமாக இருந்து வந்தது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக இந்தியா அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்தது. இதே காலகட்டத்தில் உக்ரைன் ஆயுத இறக்குமதி 8.8 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் ஆயுத இறக்குமதியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது உக்ரைன்.
உக்ரைனில் ஊடுருவியபின், ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதி 155 சதவீதம் அதிகரித்தது. பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 61 சதவீதம் அதிகரித்தது. உலகளவில் ஆயுத இறக்குமதியில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானுக்கு 81 சதவீத ஆயுதங்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.
இந்தியா உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரிப்பதால், 2015-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை, ஆயுத இறக்குமதி 9.3 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 36 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 33 சதவீதம் பிரான்ஸிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 13 சதவீதம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.