புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் தாக்கலின்போது காரைக்கால் சுயேட்சை எம்எல்ஏ சிவா பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, காரைக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது சுகாதாரத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு சுயேட்சை எம்எல்ஏ சிவா எழுந்து நின்று பேசி வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர் செல்வம் நீக்கினார்.
பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் சுயேட்சை எம்எல்ஏ சிவா கூறுகையில், “காரைக்காலில் சுகாதாரம் தொடர்ந்து புறக்கணிப்படுகிறது. வெளியூருக்குதான் சிகிச்சைக்கு செல்கிறோம். மோசமான நிலையில் சுகாதாரத்துறை இருக்கிறது. புதுச்சேரிக்கு செய்யுங்கள். ஆனால் காரைக்காலுக்கும் மருத்துவமனை கட்ட உதவுங்கள் என்று கோரினோம். பணம் பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை. காரைக்காலுக்கு செய்யும் வகையில் இந்த அரசு செயல்படவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தேன்” என்றார்.