நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா, இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் கிரிஷ் சிலுகுரி – லட்சுமி சிலுகுரி ஆகியோர் 1970-களின் பிற்பகுதியில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். உஷாவும் ஜே.டி.வான்ஸும் யேல் சட்டக் கல்லூரியில் படிக்கும்போது சந்தித்துக் கொண்டனர்.
வழக்கறிஞரான உஷா, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ஜி.ராபர்ட்ஸ் மற்றும் கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பிரட் கவனாக் ஆகியோருக்கு எழுத்தராகப் பணியாற்றியுள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்ற பிறகு உஷா தனது குடும்பத்தோடு முதல்முறையாக இந்தியா வர இருக்கிறார். இவர்களின் இந்திய பயணம் குறித்த திட்டங்களை நன்கு அறிந்த மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. “வான்ஸ் இந்த மாத இறுதியில் இரண்டாம் பெண்மணி உஷா வான்ஸ் உடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார். கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட ஜே.டி.வான்ஸ், இரண்டாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா செல்ல உள்ளார்” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.