தூத்துக்குடி: தமிழகத்தில் மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமல் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”தென்காசியில் இருந்து தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நாங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டோம். எங்கள் தொண்டர்கள் பூத் அளவில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து உள்ளார்கள் என்பதற்கு அறிகுறியாக இந்த பொதுக் கூட்டத்தை எடுத்துக் கொள்கிறேன்.
மூன்று மொழி வேண்டும் என்ற கையெழுத்து இயக்கத்தில் ஒரு கோடி கையெழுத்து பெற இலக்கு நிர்ணயித்து இருந்தோம். இதில் தற்போது 10 லட்சத்தை தாண்டி உள்ளோம். மிகுந்த மகிழ்ச்சி. தொண்டர்கள் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். மே மாதம் முடியும் போது எங்கள இலக்கு ஒரு கோடியை எட்டி இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மும்மொழி படிக்கக் கூடிய மாணவர்கள் மொத்தம் 15.20 லட்சம் பேர் இருப்பதாக கூறியுள்ளார். 1,635 சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பாஜக 30 லட்சம் குழந்தைகள் மும்மொழி படிப்பதாக கூறி வருகிறோம். தமிழகத்தில் 4,479 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளன. இதில் 30 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். இதிலும் மும்மொழி சொல்லிக் கொடுக்கிறார்கள். இதில் சுமார் 14.50 லட்சம் பேர் மூன்றாவது மொழி படிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் தமிழக அரசு 2 சதவீதம் பேர்தான் மும்மொழி படிக்கிறார்கள் என்று கூறினார்கள். தற்போது 15 லட்சம் வரை வந்துள்ளார்கள். தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் மே மாதத்துக்குள் 30 லட்சத்துக்கு வந்து விடுவார்கள்.
ரூ.1,000 கோடி ஊழல்: டெல்லி, சத்தீஸ்கரில் மதுபான ஊழல், அந்த அரசுகளை ஆட்டி வெளியேற்றி விட்டது. சென்னை மதுபான ஊழல் தற்போதுதான் தொடங்கி இருக்கிறது. இந்த ஊழலில் சுமார் 1,000 கோடி ரூபாய் திமுகவுக்கு கருப்பு பணத்தை மாற்றியுள்ளனர். திமுக கட்சிக்கு வரக்கூடிய பணம் அனைத்தும் மதுபானத்தை வைத்துதான் வருகிறது. மதுபானம் கொள்முதல் செய்வதில் ஏராளமான குளறுபடிகள். நேரடியாக டாஸ்மாக் மூலமாகவும், தனியாகவும் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியாக எடுக்கப்பட்ட மதுபானத்துக்கு எந்தவித வரியும் இல்லாமல் பணம் எடுக்கப்பட்டு 2024-ல் திமுக தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டது.
2026 தேர்தல் செலவுக்காக அனைத்து தொகுதிகளிலும் பதுக்கப்பட்ட பணம். மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு இந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி திமுகவுக்கு சென்றுள்ளது. டாஸ்மாக் நிறுவனமும், மதுபான ஆலைகளும் ஒன்றாக இணைந்து தமிழக மதுபான கொள்கையை முடிவு செய்கிறார்கள். மக்களை குடிக்க வைத்து, உயிர்களை எல்லாம் எடுத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இதைத் தவிர வேறு எதையும் அடுத்த ஒரு வருடத்துக்கு பேசக்கூடாது என்பது பாஜகவின் கோரிக்கை.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மும்மொழி கொள்கை அவசியமா, அவர்கள் அறிவு உள்ளவர்களா என கேட்டிருக்கிறார். அந்த அமைச்சரிடம் திருப்பி கேட்கிறேன். உங்கள் மகன் இந்திய குடிமகனா, அமெரிக்க குடிமகனா? இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு உங்கள் மகன் எந்த பள்ளியில் படிக்கிறான், உங்கள் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக் கூடிய பள்ளியில் படிக்கிறார் என்றால், உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் எல்லா அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மும் மொழியில் தான் படிக்கிறார்கள். எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் என் குழந்தை இரண்டு மொழி தான் படிக்கிறார்களா என தைரியமாக பேசுகிறார்களா? யாரும் பேசுவதில்லை. அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயம். அதனால்தான் மும்மொழி கொள்கை என்னும் போது, சமகல்வி என்று கூறுகிறோம்.
அரசு பள்ளியில் படிக்கின்ற 52 லட்சம் பேருக்கும், தனியார் பள்ளியில் படிக்கக் கூடிய 56 லட்சம் பேருக்கும் சமமான கல்வி இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளிக் கல்வித் துறை திவால் ஆகிவிட்டது. எப்படி டாஸ்மாக் திவால் ஆகிவிட்டதோ, அதேபோல் பள்ளி கல்வித் துறையும் திவால் ஆகிவிட்டது. தமிழகத்தில் தமிழைத் தவிர ஆங்கில மொழி எடுத்து படிப்பவர்கள் அதிகம். தமிழ் வழி படிக்கக்கூடிய மாணவர்கள் 27 சதவீதம் குறைந்து இருக்கிறார்கள். இதை பொறுத்தவரையில் பிரதமர் மோடி பேசிய கல்வி கொள்கையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியை படியுங்கள் எனக் கூறியிருக்கிறார். இது தமிழை ஊக்கப்படுத்தக்கூடிய திட்டம் தான். இதை புரிந்து கொள்ளாமல் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குறித்து மத்திய அமைச்சர் பேசியதற்கு, எங்களை அவமானப்படுத்தியது தமிழக மக்களையே அவமதித்தாக கனிமொழி எம்.பி. கூறுகிறார். அப்படிப் பார்த்தால் எம்.பி.யாக இருந்தபோது திகார் ஜெயிலுக்கு செல்கிறீர்கள். ஒரு எம்.பி கொலை வழக்கில் கைதானார். அந்த எம்.பி. ஜெயிலுக்கு போனால், மக்கள் மீதா குற்றம் சுமத்த முடியும். நாடாளுமன்றத்தில் திமுக அதிகப்படியாக பேசுகிறார்கள். ஏனென்றால், மதுபான ஊழல் வெளியில் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பேசுகிறார்கள். அதனை தமிழக மக்களும் கண்டுபிடித்து விட்டார்கள்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து கனிமொழி எம்.பி என்னிடம் பேசினார். அவருக்கு எல்லாம் தெரியும். அதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அது நாகரிகமாக இருக்காது என்று கூறினார். ஏற்கெனவே கனிமொழி எம்.பி.க்கு குடும்பத்தில் பிரச்சினை. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை கூறினால், அவருக்கு கூடுதல் பிரச்சினைதான் வரும் என்று நினைத்து சூசகமாக கூறி உள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி நிர்ணயிக்க முடியும்?
முதல்வர் தனது இரும்புக் கரத்தை காண்பிக்க வேண்டும். அது இரும்பு கரம் அல்ல. அது களிமண் கரம். அதனை வைத்து முதல்வர் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறார். பள்ளியில் கற்றல் திறன் குறைகிறது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு உள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சர், தமிழக மீனவர்களை நாளை சந்தித்து பேச உள்ளனர். மீனவர்கள் தேவைகள் குறித்து பேசுகின்றனர். மீனவர்கள் பிரச்சினைகள் பேசி தீர்வு காணப்படும். தமிழக முதல்வர் ஒரு கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். அவர் 2 நிமிடத்தில் 10 பொய் கூறி உள்ளார். அதனை நாங்கள் எடுத்துக் கூறி உள்ளோம்.
தமிழகத்தில் இருப்பது இருமொழி கொள்கை அல்ல. அது கோபாலபுரத்து மாடல். நாங்கள் பாரதிய மாடல், மூன்று மொழி படிக்க வேண்டும் என்று கூறுகிறோம். கோபாலபுரத்து இரு மொழி கொள்கை ஜெயிக்குமா, இந்திய மாடல் மும்மொழி கொள்கை ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எந்த தீர்வும் கிடைக்கப் போவது இல்லை. முதல்வரை பொறுத்தவரை, மொழியை வைத்து தான் அவர்களின் அரசியலை கட்டமைத்து இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்று இருக்கிறார்கள்.
கூட்டணி பொறுத்தவரையில் பலமாக நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டு காலம் இருக்கிறது. முதல்வர் கனவில் இருக்கிறார். அவரது கூட்டணி பலமாக இருக்கிறது, நாம் ஜெயித்து விடுவோம் என்று நினைக்கிறார். முதல்வர் வைத்திருப்பது அவர் மீதான நம்பிக்கை அல்ல. அவரது கூட்டணி மீதான நம்பிக்கை. இது எல்லாம் தவிடு பொடியாகும். மக்கள் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால், பெரிய கூட்டணி, சின்ன கூட்டணி பார்க்கமாட்டார்கள். வரும் காலத்தில் இது பற்றி தெளிவாக பேசுவோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.