2025 – 2026 தமிழக பட்ஜெட்: கருணாநிதி நினைவிடத்தில் நிதியமைச்சர் மரியாதை

சென்னை: 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதனை முன்னிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எல்லார்க்கும் எல்லாம் எனும் முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 -ஐ இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நவீன தமிழ்நாட்டின் சிற்பி – கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது, நிதி அமைச்சராக அவர் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இன்று நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், பட்ஜெட்மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும்.

புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும். இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட இயலாது என்பதால், இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். விடியல் பேருந்து பயண திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.