விழுப்புரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதை வைத்து விழுப்புரம் தவெக-வுக்குள் இப்போது ஏகப்பட்ட களேபரங்கள் வெடித்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்காக வந்த புஸ்ஸி ஆனந்தை வரவேற்பதற்காக, திமுக-விலிருந்து வந்த ‘கில்லி’ சுகர்ணா மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெக-வில் இணைய வந்திருந்த சுமார் 500 பேரை காந்தி சிலை அருகே திரட்டி இருந்தார்.
இவருக்கும் விழுப்புரம் (தொகுதி) மாவட்டச் செயலாளரான ‘குஷி’ மோகன் என்ற மோகன்ராஜுக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை என்கிறார்கள். இதனால், சென்னையிலிருந்து வந்த புஸ்ஸி ஆனந்தை பாதி வழியிலேயே மடக்கிய ‘குஷி’ மோகன், அவரை தனது பைக்கில் ஏற்றி குறுக்கு வழியில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாராம்.
இதனால் ஏமாற்றமடைந்த சுகர்ணாவும் அவரது ஆதரவாளர்களும் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு லேட்டாக போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். அதற்குள்ளாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், திட்டமிட்டு தன்னை புறக்கணித்த ‘குஷி’ மோகனுக்கு ஆதரவாக புஸ்ஸி ஆனந்தும் இருப்பதாக இப்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் ‘கில்லி’ சுகர்ணா.
இது தொடர்பாக நம்மிடம் ஆதங்கத்தைக் கொட்டிய அவர், “திமுக-வில் ஐந்தாண்டு காலம் ‘கில்லி’ சுகர்ணா என்ற பெயரிலேயே நகர்மன்ற உறுப்பினராக இருந்த நான், விஜய் கட்சி தொடங்கியதும் தவெக-வுக்கு வந்துவிட்டேன். ஆனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள நான் தனக்கு போட்டியாக வந்து விடுவேனோ என அஞ்சி சதி செய்கிறார் ‘குஷி’ மோகன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக மோகன் வாட்ஸ் அப் குழுவில் பதிவிடுகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? இவரின் செயல்களுக்கு பின்னால் பொதுச்செயலாளரும் உள்ளதாக சந்தேகிக்கிறேன்.

15 லட்ச ரூபாய் கொடுத்தால் விழுப்புரம் நகரச் செயலாளர் பதவி தருவதாக எனது நண்பர் மூலமாக என்னிடம் பேரம் பேசினார் மோகன். இதை புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்தேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்டத்தில் புதிதாக பொறுப்பு அறிவிக்கப்பட்டவர்களில் மோகனின் உறவினர்கள் மட்டுமே 7 பேர் இருக்கிறார்கள்.
‘மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்கள் உங்களைக் காலி செய்துவிடுவார்கள்’ என்று பொதுவெளியில் ரசிகர் மன்றத்தினரை அச்சுறுத்துகிறார் மோகன். அதற்கு பேசாமல், மற்ற கட்சிகளிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாமே. தவெக-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆனால், தவெக அரசியல் கட்சியாக மாறாமல் இன்னமும் ஒரு மன்றமாகவே இருக்கிறது” என்றார்.
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறீர்கள் என ‘குஷி’ மோகனிடம் கேட்டதற்கு, “நிகழ்ச்சிக்கு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் விழுப்புரம் நகருக்குள் வரும்போதே இரவு 9.20 ஆகிவிட்டது. அதனால் விரைவில் அவரை மேடையேற்றவேண்டும் என்பதால் பைக்கில் அழைத்துச் சென்றேன். இதில் எவ்வித உள் நோக்கமும் கிடையாது. சுகர்ணா தரப்பினர் காந்தி சிலையிலிருந்து பேரணியாகச் செல்ல திட்டமிருந்தனர். அதற்கு போலீஸ் அனுமதி இல்லை.
அவர் கூட்டியிருந்த கூட்டம் பணம் கொடுத்து கூட்டியது. நகரச் செயலாளர் பதவிக்கு நான் பணம் கேட்டதாகச் சொல்வதில் துளியும் உண்மை இல்லை. பிற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும் கட்சியில் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது” என்றார். ‘குஷி’யும் ‘கில்லி’யும் இப்படி குஸ்தி போட்டுக் கொண்டிருக்க, அந்த நிகழ்சியில் பேசிய புஸ்ஸி ஆனந்தோ, “யாரெல்லாம் தலைவருக்காக உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படும்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து கார், ஹெலிகாப்டரில் வந்தாலும் சரி, சைக்கிளில் சென்று தலைவருக்காக போஸ்டர் ஒட்டி, கொடி கட்டி உழைத்தவர்களுக்கே பதவி வழங்கப்படும். இது தலைவரின் உத்தரவு” என்று தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்!