சென்னை: “ரூபாய் குறியீடு என்பது அமெரிக்க டாலரின் குறியீட்டோடு போட்டியிடுவதற்கு தானே தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?.” என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூபாய் குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்திய திருநாட்டிற்கு ஒரு குறியீடாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்கு தான் தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?
2010-ல் உங்கள் திமுக மத்திய ஆட்சியில் இருந்த போது தான் ரூபாய்க்கான இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
அப்போதெல்லாம் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
ரூபாய் என்ற வார்த்தை மூலச் சொல் தமிழ் அல்ல அது சமஸ்கிருத வார்த்தை என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதைத்தானே பயன்படுத்த முன் வந்திருக்கிறீர்கள்…
சத்தியமேவ ஜெயதே என்ற உபநிடத முழக்கம் தான் நீங்கள் அரசு முத்திரைகளில் பயன்படுத்தும் வாய்மையே வெல்லும் என்கிற வாசகம்!!!
உபநிடதம் ஹிந்துத்துவா இல்லையா? அதை இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்ல உங்களால் முடியுமா?
சிங்கங்களை கொண்ட அரச முத்திரை என்பது அசோகரின் சின்னம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நம் தேசிய கீதம் ஜன கன மன வங்க மொழியில் பாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் திமுக அரசாங்கம் தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா?
இதற்கு உங்களிடம் இருந்து பதில் நான் எதிர்பார்க்க மாட்டேன்…
ஏனென்றால் நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.