Delhi Capitals Captain For Ipl 2025: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிடில் ஆர்டரில் இந்திய அணியின் முதுகெலும்பாக அக்சர் படேல் இருந்தார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். கடந்த சில ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இருந்து வந்தார். ஆனால் இந்த முறை ஏலத்தில் அவரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எடுத்துள்ளது. இதனால் புதிய கேப்டனை டெல்லி அணி நிர்வாகம் தேடி வந்தது.
கேப்டன் பொறுப்பை நிராகரித்த கேஎல் ராகுல்
முதலில் கேஎல் ராகுலை டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. ஆனால் அதனை கேஎல் ராகுல் நிராகரித்துள்ளார், தனக்கு கேப்டன்சி வேண்டாம் என்றும் ஒரு வீரராக இருக்க விரும்புகிறேன் என்றும் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அக்சர் 131 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,653 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 7.28 என்ற எகானமி ரேட்டில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 31 வயதாகும் அக்சர் படேல் ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 82 போட்டிகளில் விளையாடி 967 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் 7.09 என்ற எகானமியில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல போட்டிகளை தனி வீரராகவும் வென்று கொடுத்துள்ளார்.
A new era begins to pic.twitter.com/9Yc4bBMSvt
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
கேப்டன்சி குறித்து அக்சர் படேல்
“டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமை, என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் டெல்லி கேபிடல்ஸில் இருந்த காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும், மனிதனாகவும் வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழி நடத்த நான் தயாராகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன். எங்கள் நிர்வாகம் ஏலத்தில் ஒரு வலுவான அணியை எடுத்துள்ளனர். மேலும் குழுவில் பல மூத்த வீரர்கள் உள்ளனர். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவின் மூலம் இந்த சீசனை வெற்றிகரமாக எதிர்நோக்கி காத்துள்ளோம்” என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் 2025 அணி
அக்சர் படேல், கே.எல்.ராகுல், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், டி. நடராஜன், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அசுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ், சமீர் ரிஸ்வி, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி மற்றும் கருண் நாயர்.