8 இடங்களில் அகழ்வாராய்ச்சி: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

சென்னை: தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய 8 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். பண்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியது: “தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம்-கீழடி. தூத்துக்குடி மாவட்டம்-பட்டணமருதூர். தென்காசி மாவட்டம்-கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் -ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம்-தெலுங்கனூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களில் உள்ள பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா) ஆகிய பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.

அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில், தொல் மரபணுவியல் (Ancient DNA analysis),உலோகவியல் பகுப்பாய்வு (Metallurgical analysis), தாவரவியல் (Micro Botany) மகரந்தப் பகுப்பாய்வு (Pollen analysis), தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு (Optically Stimulated Luminescence Dating), L (Ceramic Technology) உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள். உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

மேலும், தென்கிழக்கு ஆசியா, மத்திய தரைக்கடல் பகுதி, அரேபியத் தீபகற்பம் மற்றும் ரோமப் பேரரசுப் பகுதிகளுடன் பழந்தமிழர் மேற்கொண்டிருந்த கடல்வழி வணிகச் சிறப்பினை வெளிக்கொணரும் வகையில், பல்வேறு ஆழ்கடல் அகழாய்வுகளை தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களின் ஆலோசனையுடனும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடும், காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழகமெங்கும் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களை, உயர்தொழில்நுட்ப வசதிகள் துணை கொண்டு அழகுற காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைப்பதன் மூலம், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை உலகுக்கு உரியமுறையில் பறைசாற்றிட முடியும் என இந்த அரசு கருதுகிறது. அந்த வகையில், கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும்.

சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மேலும், தமிழகத்துக்கு வருகைபுரியும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழரின் தொன்மை மற்றும் தொடர்ச்சியின் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் விதமாக, மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்.

காலத்தை கைவண்ணத்தில் வென்ற ஐம்பொன்னால் கைவினைஞர்களின் உருவான இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. சிற்ப அமைதி, உடல் நெகிழ் தோற்றத்தன்மை, எழில்மிகு முத்திரைகள் கொண்ட சிற்பத் திருமேனிகளை வெளிநாட்டவரும் கண்டு வியக்கும் வகையில் மரபுசார் கட்டடக்கலை வடிவமைப்புடன் கூடிய காட்சி அரங்கம் ஒன்று 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்படும்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.