சென்னையில் ரூ.50 கோடியில் ‘வியன்’ திறன்மிகு மையம்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

சென்னை: அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, சென்னையில் ஒரு திறன்மிகு மையம் வியன் (Viyan) AVGC-XR Hub எனும் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “இயங்குபடம் , காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் (AVGC-XR) கொள்கை ஒன்று, துறைசார்ந்த வல்லுநர்களோடு இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்துறையில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, சென்னையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence)வியன் (Viyan) AVGC-XR Hub எனும் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, அதன் துணை மையங்கள் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 3 ஆண்டுகளில் படிப்படியாக உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இணைய சேவைகள் மற்றும் தரவுக் கட்டமைப்புகளுக்காக பெருமளவில் மூலதனம் தேவைப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு iTNT மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத்தில் பதிவு செய்துள்ள புத்தொழில் நிறுவனங்கள் தரவு மைய சேவைகளை எளிதில் பெறும் பொருட்டு, தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பு வரையிலான தரவு மைய சேவைகளுக்கான வில்லைகளை (Vouchers for Data Centre Services) வழங்கிடும் திட்டம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு புத்தொழில் தரவு மைய சேவைத் திட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.