போரை நிறுத்தும் 'உன்னத பணி'; மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதி மற்றும் ஆயுத உதவிகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சமீபத்தில் நிறுத்தியது.

மேலும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதே சமயம், உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, “உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை. அமைதியின் பக்கம் இந்தியா இருக்கிறது. இது போருக்கான காலம் அல்ல என்று ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிபர் டிரம்ப்பின் முயற்சிகளை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், உக்ரைனின் போர்நிறுத்த திட்டம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ள ரஷிய அதிபர் புதின், போரை நிறுத்தும் உன்னத பணிக்காக பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்தம் குறித்து விவாதிக்க ரஷியா தயாராக உள்ளது என்றும், ஆனால் போர்நிறுத்தத்தின் விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும் சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஒரு உன்னதமான பணியாகும்.

மேலும் போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். ஆனால் இந்த போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சினையின் மூலக்காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.