எனக்கு அந்த வரிசையில் பேட்டிங் செய்வதுதான் பிடிக்கும் – கே.எல்.ராகுல்

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன் இலக்கை இந்திய அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக 76 ரன்கள் (83 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா (263 ரன், 3 விக்கெட்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக 6-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திய அணியில் அறிமுகம் ஆன கால கட்டங்களில் தொடக்க வரிசையில் களமிறங்கிய அவர், அதன் பின் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களின் வருகையால் பின்வரிசையில் களமிறக்கப்பட்டார். இருப்பினும் அந்த வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி வரும் அவர், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் உள்ளார்.

இந்நிலையில் தனக்கு பிடித்த பேட்டிங் வரிசை குறித்து கே.எல்.ராகுல் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், “நான் டாப் ஆர்டரில் விளையாடி வளர்ந்தவன். 11 வயதில் மங்களூரில் நடந்த எனது முதல் போட்டியிலிருந்து இந்தியாவுக்காக விளையாடும் ஆரம்ப நாட்கள் வரை, என் வாழ்க்கையின் பெரும்பகுதி வரை, நான் ஒரு டாப் ஆர்டரில் விளையாடுபவனாக இருந்திருக்கிறேன். அந்த வரிசையியில்தான் நான் மிகவும் வசதியாக இருக்கிறேன், எனக்கு மிகவும் இயல்பாகத் தோன்றுகிறது.

அப்படிச் சொன்னாலும், நீங்கள் ஒரு குழு விளையாட்டை விளையாடும்போது, எப்போதும் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய முடியாது. நீங்கள் நெகிழ்வாகவும் அணியின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக, அதை ஏற்றுக்கொள்ளவும், எனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வரிசையிலும் களமிறங்கி சிறந்ததை வழங்கவும் கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.