சென்னை: சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.முத்துலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின்பொருளாளர் இந்திராணி கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் ரூ.2 ஆயிரம் ஓய்வூதிய தொகையை வைத்து வாழ்க்கையை நடத்த முடியவில்லை. எனவே அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வேண்டும் என தொடர்ந்து 8 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுவரை எங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.