PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பாஜக – திமுக மோதல் ஏன்… மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன?!

Tபி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்குமான போர் தீவிரமடைந்திருக்கிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒதுக்குவேன் என மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. ஆளும் தி.மு.க அரசோ, `தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என முழக்கமிட்டு கொண்டிருக்கிறது. உண்மையில் இதில் அரசியல் செய்வது யார்? பா.ஜ.க-வா, தி.மு.க-வா? இந்த அரசியலில் பாதிக்கப்படப்போவது யார்? அப்படியென்ன இந்த திட்டத்தில் இருக்கிறது, பார்ப்போம்!

PM SHRI
PM SHRI

பி.எம் ஸ்ரீ திட்டம் (PM SHRI Scheme):

`பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா’ (Pradhan Mantri Schools for Rising India) என்பதன் சுருக்கமே பி.எம் ஸ்ரீ திட்டம். இத்திட்டம் பள்ளிகளில் கல்வியின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, 2022 செப்டம்பர் 7-ம் தேதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 14,500 பள்ளிகளை தேர்வுசெய்து அவற்றை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இதன் இலக்கு.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

தேர்வு செய்யப்படும் பள்ளிகளை, சுற்றுச்சூழலுக்கேற்ற பசுமைப் பள்ளிகளாக உருவாக்கவதோடு, ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் (lnnovation Councils) ஆகிய வசதிகள் இப்பள்ளிகளில் உருவாக்கப்படும். இந்த வசதிகள் Pre KG முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டுவரப்படும். இது மட்டுமல்லாமல் இப்பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக உள்ளூர் தொழிற்துறையுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

கல்வி
கல்வி

திட்டத்துக்கான நிதி:

பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கு 2022-23 முதல் 2026-27 வரை முதல் ஐந்தாண்டுகளுக்கு ரூ. 27,360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு கொண்டுவந்த திட்டமாக இருந்தாலும், நிதியில் 60 சதவிகிதத்தை மட்டுமே மத்திய அரசு செலவிடும். 40 சதவிகித நிதியை இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் செலவிட வேண்டும். அதன்படி, இந்தத் திட்டத்துக்கான ரூ. 27,360 கோடியில் ரூ.18,128 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

பிரச்னை எங்கு ஆரம்பிக்கிறது?

மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்தும் இத்திட்டத்துக்கு, முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டமாக தோற்றமளிக்கும் `பி.எம் ஸ்ரீ’ என்ற பெயரிலேயே பிரச்னை தொடங்குகிறது. ஆனால், ஒரு சிறிய பிரச்னையை மறைக்க அதைவிட பெரிய பிரச்னையை ஏற்படுத்துவது போல இந்தப் பெயர் பக்கம் கவனம் திரும்பாத வகையில், தேசிய கல்விக் கொள்கையை முதலில் ஏற்றுக்கொண்டால்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு செக் வைத்திருக்கிறது. அதன்படி, பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்பிக்கப்படும். இந்தத் இடத்தில்தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கின்றன.

மத்திய அரசின் `பிம் ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் திட்டம்
மத்திய அரசின் `பிம் ஸ்ரீ’ (PM SHRI) பள்ளிகள் திட்டம்

மத்திய கல்வியமைச்சரின் வாதம் என்ன?

மார்ச் 10-ம் தேதி மக்களவையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டவது அமர்வில் உரையாற்றிய தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டு தர வேண்டிய ரூ, 2,152 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்குப் பதிலளிக்கத் தொடங்கிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், “இந்த நிதியாண்டு முடிய இன்னும் 20 நாள்கள் இருக்கிறது. தி.மு.க எம்.பி-க்கள், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தனர். தமிழக முதலமைச்சரும் ஒப்புக்கொண்டார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

ஆனால், இடையில் ஒரு சூப்பர் முதல்வர் குறுக்கிட்டதால், திடீரென அவர்கள் யுடர்ன் அடித்துவிட்டனர். தி.மு.க-வினர் நேர்மையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள்” என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அவையிலிருந்த தி.மு.க எம்.பி-க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தன்னுடைய வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயார் என்று கூறினார். இப்படிச் சொன்னவர் இதுவரை மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை.

முதல்வரின் கண்டனமும், விளக்கமும்?

“தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?” என எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுப்பிய ஆகஸ்ட் 30, 2024 என்ற தேதியிட்ட கடிதத்தைப் பகிர்ந்திருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அந்தக் கடிதத்தில், “பி.எம் ஸ்ரீ தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஜூலை 6, 2024 தேதியிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தக் கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கை சம்மந்தப்பட்ட விதி நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். இதைத்தான் முதல்வர் ஸ்டாலின், “தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பி.எம் ஸ்ரீ திட்டதுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (PM SHRI MoU) முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?” என்று கேள்வியெழுப்பினார்.

உண்மையை திரித்துப் பதிலளித்த மத்திய அமைச்சர்?

முதல்வரின் கண்டனத்தைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான், பி.எம் ஸ்ரீ திட்டதுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவிருப்பதாக, தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தனக்கு அனுப்பிய மார்ச் 15, 2024 தேதியிட்ட கடித்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். கூடவே, “கடந்த 2024 மார்ச் 15-ல் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்கிறேன். தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? தி.மு.க.,வின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே இந்த மாற்றம். தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களைவிட தமிழகத்தில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்” என்று தர்மேந்திர பிரதான் விமர்சித்தார்.

தமிழ்நாடு அரசின் கடிதம்
தமிழ்நாடு அரசின் கடிதம்

உண்மையிலேயே அந்தக் கடிதத்தில், “பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆர்வமாக இருக்கிறது. இதில், பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையிலான மாநில அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடும்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தர்மேந்திர பிரதான் இதில் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி என்ன?

மும்மொழிக் கொள்கை, மூன்றாம் மொழியாக இந்தி மாஸ்க் அணிந்திருக்கும் சமஸ்கிருதம், 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, உள்ளிட்ட சில அம்சங்களால் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. இதனால், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை ஒதுக்க முடியும்” என்கிறார். ஆனால், உண்மையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதிக்கும், தேசிய கல்விக் கொள்கைக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

சமக்ரா சிக்ஷா அபியான் (SSA)
சமக்ரா சிக்ஷா அபியான் (SSA)

காரணம் இந்த ரூ. 2,152 கோடி கல்வி நிதி என்பது `சமக்ரா சிக்ஷா அபியான் (SSA)’ என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி. இத்திட்டம் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கைக்கு முன்பே 2018-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் பகிர்ந்து செலவிட வேண்டும். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான ஊதியம், கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்குத் திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது.

school education
school education

அதன்படி, 2024-25 ஆம் நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி ரூ.3,586 கோடி. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடி (60 சதவிகிதம்). இதைத்தான் தமிழ்நாடு அரசு, “தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம் ஸ்ரீ திட்ட விவகாரங்களை இதில் புகுத்தாமல், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் எங்களுக்குத் தர வேண்டிய நிதியை ஒதுக்குங்கள்” என்று வலியுறுத்தி வருகிறது. 2024-25 நிதியாண்டு முடிய (மார்ச் 31) இன்னும் முழுமையாக மூன்று வாரங்கள் கூட இல்லை.

`கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்’ என மத்திய அரசும், NEP-ஐ எதிர்க்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் கூறிவருகின்றன. ஆனால், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம் ஸ்ரீ திட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் தரப்பில் நான்கு முக்கிய காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

மும்மொழிக் கொள்கை:

மாணவன் தனது தாய் மொழியில் கல்வி கற்கும்போது பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும், சிந்திக்கவும் அது உதவுகிறது. ஆங்கிலத்தைக் கற்கும்போது அது உலகளவில் தொடர்புகொள்ளவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய மொழியாகவும் அது உதவுகிறது. இந்த இடத்தில்தான் அந்த மாணவனுக்கு எந்த வாழ்வியல் வழியாகவும் தொடர்பில்லாத மொழியை கூடுதலாக படிக்க வேண்டும் என்று திணிப்பது கூடுதல் சுமையாகத்தான் இருக்கும். மூன்றாவது மொழியை தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று கூறினாலும், மூன்றாவது மொழியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டு `ஒரு நாடு ஒரு மொழி’ என்ற நிலைக்கு கொண்டு சென்று இந்தி மொழியை திணிக்க செய்யலாம்.

தேசிய கல்விக் கொள்கை - 2020
தேசிய கல்விக் கொள்கை – 2020

ராஜஸ்தானின் தாய்மொழி ராஜஸ்தானி, பீகாரின் தாய்மொழி பிஹாரி, ஹரியானாவின் தாய்மொழி ஹரியான்வி, உத்தரப்பிரதேசத்தின் தாய்மொழி போஜ்பூரி. இந்த மாநிலங்கள் இந்தியை ஏற்றுக்கொண்டதால், தங்களின் தாய் மொழியை இழந்ததோடு இந்தியை முதல் மொழியாகவும், தங்களது தாய்மொழியை மூன்றாவது மொழியாகவும் பயில்கின்றன. பல்வேறு கலாசார மரபு கொண்ட மாநிலங்களால் ஒருங்கிணைப்பட்ட இந்தியாவில் அதிகபட்சமாக 52.83 கோடி பேர் மட்டுமே இந்தி மொழி பேசுபவர்களாக இருக்கின்றனர் என 2011 சென்சஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

பள்ளிக் கல்வியில் தொழிற்கல்வியைப் புகுத்தி குலக்கல்வி முறையை நடைமுறைப்படுத்தத் திட்டம்!

தேசிய கல்விக் கொள்கையில், “6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் உள்ளூரில் தச்சு வேலை, தோட்ட வேலை, மண்பாண்டம் செய்யும் கைவினை கலைஞர்களிடம் 10 நாள்கள் புத்தகப்பையற்ற தொழிற்பயிற்சி பெறுவர். குறிப்பிட்ட இடைவெளிகளில், குழந்தைகள் அவர்களது பள்ளிகளுக்கு வெளியேயுள்ள வரலாற்று, பண்பாட்டு, சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும், நினைவுச் சின்னங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும், உள்ளூர், தாலுகா அல்லது மாவட்டத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைப் பார்ப்பதற்கும் அழைத்துச் செல்லப்படுவர்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

இதேதான் பி.எம் ஸ்ரீ திட்டத்தில், “மாணவர்களுக்கு அவர்களின் திறன் மேம்பாட்டுக்காக உள்ளூர் தொழிற்துறையுடன் இணைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பள்ளிப்பருவத்திலேயே தொழிற்கல்வியைக் கொண்டுவருவது, மாணவர்களை கல்வி கற்கவேண்டிய வயதில் அரைகுறைத் திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களாக வேலைச் சந்தையில் சிக்க வைக்கும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் சிறுவயதிலேயே கேள்விக்குறியாகும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே பாகுபாடு:

பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் சில ஆயிரம் பள்ளிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வித் தரம் மிகுந்த பள்ளிகளாக மாற்றப்படுவதால், அரசே அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் பாகுபாடு காட்டுவதுபோல் இருக்கிறது. `அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்குவதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்’. இதைவிடுத்து அரசே தனது மாணவர்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது. இது பிற அரசுப் பள்ளி மாணவர்களிடையே தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, பள்ளி இடைநிற்றலை, குறிப்பாக பெண் பிள்ளைகளிடத்தில் இடைநிற்றலை அதிகரிக்கும் சூழலை உருவாக்கும்.

தேர்வு
தேர்வு

பொதுத்தேர்வுகள்:

3, 5,8,10,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வைத்து மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுத்து கல்வியின் வளையத்தில் இருந்து அவர்களை எளிதாக வெளியேற்றும் வேலையையும் தேசிய கல்விக் கொள்கையைச் செய்கிறது என்கிற வாதமும் எழ தவறவில்லை…

கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில் எந்த அரசாக இருந்தாலும் தங்களுடைய அரசியல் சித்தாந்தங்களை முலாம் பூசி புகுத்தாமல், மாணவர்களுக்கு எது தேவையென்று அறிந்து கொள்கையை வகுத்தால், அது மாணவர்களின் எதிர்காலத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்குமான கொள்கையாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.