‘இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை’ – தமிழகத்தை சாடிய பவன் கல்யாண்

அமராவதி: மொழிக் கொள்கை மற்றும் வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையே நிலவும் அரசியல் சார்ந்த சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று காக்கிநாடா மாவட்டம் பிதாபுரம் தொகுதியில் நடைபெற்ற ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக்கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது.

சனாதன தர்மம் எனது ரத்தத்தில் கலந்துள்ளது. அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லோருக்கும் மத சுதந்திரம் என்பது உண்டு. நான் இந்து மத பாதுகாவலர்.

மத சுதந்திரம் சார்ந்த விஷயத்தில் ஜன சேனா வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை. எந்த மதத்தின் மீது தாக்குதல் நடந்தாலும் அதை கண்டிக்க வேண்டும். தவறு எங்கு நடந்தாலும் அது தவறு தான். தேசத்தை வடக்கு, தெற்கு என பிரிக்கும் துணிவு யாரிடத்திலும் இல்லை. அது மாதிரியான முயற்சிகள் நடந்தால் நிச்சயம் என்னை போன்றவர்கள் அதை தடுக்க முன்வருவோம். நான் சமூக மாற்றத்துக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

பல சவால்களை கடந்து ஜன சேனா இந்த நிலையை எட்டியுள்ளது. 2019-ல் நாம் தோல்வியை தழுவிய போது நம்மை கேலி செய்தனர். நம்மை சட்டப்பேரவையின் வாசலை கூட நெருங்க விட மாட்டோம் என சவால் செய்தனர். இன்று 21 எம்எல்ஏ மற்றும் 2 எம்பி-க்களை நாம் கொண்டுள்ளோம். நமக்கு பயம் கிடையாது.” என பவன் கல்யாண் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.