20.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,631.53 கோடி பயிர் சேத இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: “இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை, தோட்டக்கலைப்பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, 1,631 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 5,242 கோடி ரூபாய் நிதியானது, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 146 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டில் 29 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடிப் பரப்பு 2023-2024 ஆம் ஆண்டில் 33 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் என்ற அளவினை எட்டியுள்ளது.

மேலும், பயிர் உற்பத்தித்திறனை உயர்த்திடும் முயற்சியில், பல்வேறு உயர்தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி, வேளாண் பயிர்களில் தமிழ்நாடு இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தித்திறனில் முதல் இடத்திலும், மக்காச்சோளம், எண்ணெய்வித்துகள். கரும்பு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திலும், நிலக்கடலை, குறுதானியங்கள் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளால் அதிக அளவில் பயிர் இழப்புகள் ஏற்பட்டபோதும் வேளாண்மை-உழவர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களினால் 2021-22 முதல் 2023-24ஆம் ஆண்டு வரை 346 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி அடையப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நீர்ப்பாசன ஆதாரத்துக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் புதிய பாசன மின் இணைப்புகளை 2021-22 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது. இந்த சிறப்பு முயற்சியின் காரணமாக, இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரம் பாசன மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு. கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ். 55,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள். கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசால் நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல், சன்ன ரகத்துக்குக் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும், சாதாரண ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் இதுவரை 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1,452 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கும். ஒரு மெட்ரிக் டன்னுக்கு 215 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு இதுவரை 425 லட்சம் மெட்ரிக் டன் கரும்புக்கு 848 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் தீவிர காலநிலை மாற்றங்கள் காரணமாக, பல்வேறு இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு, பயிர் சேதங்களின் மூலம் உற்பத்தியில் தாக்கத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்டு அவர்களின் வருவாய் இழப்பினை சரிசெய்து, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, 1,631 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 5,242 கோடி ரூபாய் நிதியானது, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.