சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றிக்காக உதவிய சுழற்பந்து வீச்சாளர் வரும் சக்கரவர்த்தி தனது வாழ்க்கையின் கடினமான காலங்களை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பையின் போது இந்திய அணி பாகிஸ்தானிடம் படு தோல்வி அடைந்தது. அந்த அணியில் வருண் சக்கரவர்த்தியும் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில் அந்த போட்டி முடிந்த பிறகு தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் இந்தியா திரும்பினால் உனக்கு நல்லது இல்லை, அங்கே இருந்து விடு என்று மிரட்டல் வந்ததாகவும் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு 2021 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அறிமுகமானார், அதனை தொடர்ந்து 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தார். விராட் கோலி தலைமையில் விளையாடிய இந்திய அணி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த தொடரில் வருண் சக்கரவர்த்தி இந்தியாவிற்காக மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக்கூட அவரால் எடுக்க முடியவில்லை. இதனால் அந்த சமயத்தில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நான் நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
“அது எனக்கு ஒரு இரண்டு காலம். டி20 உலக கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் என்னால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. அதன்பிறகு மூன்று ஆண்டுகள் நான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பிறகு என்னை நானே அதிக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. எனது பயிற்சிகளை அதிகப்படுத்தினேன். என்னால் முடிந்தவரை எனது முழு திறமையை வெளிப்படுத்தினேன். கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்து வீசியது மீண்டும் இந்திய அணியில் இடம் பெற எனக்கு உதவியது.
நான் எனது வாழ்வில் நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அவை எவ்வளவு மோசமானவை என்பது எனக்கு தான் தெரியும். நான் அவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். 2021 டி20 உலக கோப்பை முடிந்த பிறகு நான் விமான நிலையத்திலிருந்து வீடு செல்லும் வரை என்னை சிலர் பின் தொடர்ந்தனர். அது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால் அவர்கள் தான் தற்போது என்னை பாராட்டி வருகின்றனர்” என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.