Rohit Sharma : மைதானத்தில் பிளேயர்களை திட்டுவது குறித்து ரோகித் கொடுத்த விளக்கம்

Rohit Sharma latest news : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இப்போது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற கையோடு இந்தியா திரும்பிய அவர், மகள் மற்றும் மனைவியுடன் சுற்றுலாவில் இருக்கிறார். இந்திய அணியில் அவருடன் விளையாடிய மற்ற பிளேயர்கள் எல்லாம் ஐபிஎல் தொடருக்காக அந்தந்த அணிகளில் இணைந்துவிட்ட நிலையில், ரோகித் சர்மா இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையவில்லை. இந்த சூழலில் ஜாலியான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ரோகித் சர்மா. அதில் பல சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த பேட்டியில் போட்டியின் நடுவே பிளேயர்களை கடுமையாக திட்டுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருக்கும் ரோகித் சர்மா, உண்மையில் பிளேயர்களை திடீரென உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிடுவேன். சில சமயங்களில் நடக்கும். எனக்கும் தெரியும். ஆனால் அப்படி பேசிய பிறகு அந்த சம்பவம் குறித்து யோசிப்பேன். அதேநேரத்தில் அந்த நொடிக்காக மட்டுமே திட்டியிருப்பேனே தவிர, இதில் தனிப்பட்ட விஷயங்கள் ஏதும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், இந்திய அணியில் விளையாடும் எல்லா பிளேயரும் நாங்கள் ஒரு குடும்பமாக இருக்கிறோம்.

அண்ணன் தம்பியாக பழக்கக்கூடியவர்கள். நீண்ட நாட்களாக ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. இதுவரை நான் திட்டியதால் யாரும் கோபித்துக் கொள்ளவில்லை. அப்படியே இருந்தாலும் ஜாலியாக பேசி தீர்த்துக் கொள்வோம். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. முடிவில் நாங்கள் போட்டியில் வெற்றி பெறுகிறோமோ என்பதை மட்டுமே பார்ப்போம். போட்டிக்குப் பிறகு எல்லாம் சகஜமாகிவிடும். போட்டியில் இருக்கும் அழுத்தம் காரணமாக சில நேரங்களில் நான் அப்படி ரியாக்ட் செய்துவிடுவேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட குல்தீப் யாதவ் உள்ளிட்ட பிளேயர்களை ரோகித் சர்மா மைதானத்திலேயே கடிந்து கொண்டார். இரண்டு முறைக்கு மேல் குல்தீப் யாதவ் தான் திட்டு வாங்கினார். இந்த வீடியோக்கள் எல்லாம்கூட சோஷியல் மீடியாக்களில் வைரலாகியது. இதை வைத்தே இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தான் ரோகித் சர்மா இப்படி பதில் அளித்துள்ளார். ரோகித் சர்மாவும் தன்னைப் பற்றி வரும் வீடியோக்களை அவ்வப்போது பார்த்துவிடுவாராம். குறிப்பாக ரோகித் சர்மாவின் மனைவி சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் என்பதால் ரோகித்தை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று சொல்லிவிடுவாராம். இதை எல்லாம் ரோகித் சர்மா சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்திய அணி அடுத்ததாக அதாவது ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நிலையில், அடுத்த சைக்கிள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதனால் இம்முறை தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இந்த தொடருக்கான அணியில் ரோகித் மற்றும் விராட் கோலி இருப்பார்களா? என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.