பாகிஸ்தான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை

வாஷிங்கடன்: பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு கடுமையான புதிய பயணத் தடைகள் விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய தடை குறித்த குறிப்பாணையில் மொத்தம் 41 நாடுகள் மூன்று தனித்தனி குழுக்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா, லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகள் முழுமையான விசா இடைநீக்கத்தை (visa suspension) எதிர்கொள்ளலாம்.

இரண்டாவது குழுவில் எரித்ரேயா, ஹைதி, லாவோஸ். மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை, சுற்றுலா மற்றும் மாணவர் விசா அதேபோல் பிற புலம்பெயர்வு விசாக்களைப் பாதிக்கும் பகுதி அளவிலான இடைநீக்கத்ததை எதிர்கொள்ளும்.

மூன்றாவது குழுவில் பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றால், அவற்றுக்கு விசா வழங்கலை பகுதியளவில் நிறுத்தி வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்தப் பட்டியலில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது அமெரிக்க வெளியுறுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட நிர்வாகத்தினரால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் பதவி காலத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 7 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதித்த தடையினை நினைவூட்டுகிறது.

முன்னதாக, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய அமெரிக்காவுக்குள் நுழைய விரும்பும் எந்த ஒரு வெளிநாட்டினரையும் தீவிரமான பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஜன.20 ம் தேதி ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

இந்த ஆணையின் படி, எந்தெந்த நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதி பயணத்தடைகளை விதிக்கலாம் என்ற பட்டியலைத் தயாரிக்குமாறு பல அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

டொனால்டு ட்ரம்பின் இந்த உத்தரவு, அவரது இரண்டாவது பதவி காலத்தின் தொடக்கத்தில் துவக்கி இருக்கும் குடியேற்ற கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.