பஞ்சாப் – அமிர்தசரஸ் கோயிலை குறிவைத்து நடந்த வெடிபொருள் வீச்சு சம்பவத்தால் பதற்றம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோயிலுக்கு வெளியே நிகழ்த்தப்பட்ட வெடிபொருள் வீச்சு சம்பவத்தில், கோயிலின் சுவர்கள் தேசமடைந்தது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட கண்ட்வாலா பகுதி குடியிருப்பு வாசிகளிடையே இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாகுர்த்வாரா கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் வருவது தெரிகிறது. சிறிதுநேர காத்திருப்புக்கு பின்பு அவர்களில் ஒருவர் சில வெடிபொருள்களை கோயிலை நோக்கி வீசுகிறார். இருவரும் தப்பிச் சென்ற சில நொடிகளில் வெடிபொருள் வெடிப்பது தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அமர்தசரஸ் காவல் ஆணையர் குர்ப்ரீத் சிங் புல்லர் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 2 மணிக்கு கோயில் பூசாரி, போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நானும் மற்ற உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்றோம்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் மாதிரிகளை சேகரித்து உள்ளனர். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார். இதனிடையே, கடந்த நான்கு மாதங்களாக அமிர்தசரஸ் மற்றும் குருதாஸ்பூர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை குறித்து பல குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதியைக் குலைக்க முயற்சி: இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “பஞ்சாப்பின் அமைதியை குலைக்க பல முயற்சிகள் நடக்கின்றன. அவற்றில் போதைப்பொருள், கொள்ளை கும்பல் மற்றும் குண்டுவீச்சு சம்பவங்கள் ஒரு பகுதி. மேலும், பஞ்சாப் ஒரு பதற்றமான மாநிலம் என காட்டும் முயற்சிகளும் நடந்து வருகின்றது. ஹோலி பண்டிகையின்போது பிற மாநிலங்களில் ஹோலி ஊர்வலத்தின்போது கலவரத்தை அடக்க போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். ஆனால், பஞ்சாப்பில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சட்டம் – ஒழுங்கு பஞ்சாப்பில் சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.