ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு பிறந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் முதல் அன்கேப்பட் பிளேயராக களமிறங்கும் தோனி வரை பல்வேறு சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாத சீசனாக இந்த ஐபிஎல் சீசன் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை, கடந்த 10 சீசன்களில் யார் யார் வென்றார்கள், அதில் யார் அதிமுறை ஆரஞ்சு நிற தொப்பி வென்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.

2015 – டேவிட் வார்னர்
இந்த சீசனில் கோப்பையை வென்றது மும்பை அணியாக இருந்தாலும், ஆரஞ்சு கேப் வென்றது டேவிட் வார்னர். மொத்தமாக 562 ரன்கள் குவித்து முதல் முறையாக ஆரஞ்சு கேப் வென்ற டேவிட் வார்னர், ஐ.பி.எல்லில் நான்காவதாக ஆரஞ்சு கேப் வெல்லும் ஆஸ்திரேலிய வீரராகவும் தனது பெயரைப் பதிவு செய்தார்.
2016 – விராட் கோலி
ஐபிஎல் ரசிகர்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத சீசன் இது. காரணம், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே சீசனில் 4 சதங்களுடன் மொத்தமாக 973 ரன்கள் குவித்தார் விராட் கோலி. ஒரே சீசனில் அதிக சதம் அடித்ததும் சரி, ஒரே சீசனில் இவ்வளவு ரன்கள் அடித்ததும் சரி இன்றுவரையில் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கிறது. இத்தகைய சாதனையுடன் முதல்முறையாக ஆரஞ்சு கேப் வென்றார் கோலி. ஆனாலும், இறுதிப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வியைத் தழுவி சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டது பெங்களூரு அணி.

2017 – டேவிட் வார்னர்
இந்த சீசனில் 14 போட்டிகளில் 641 ரன்கள் குவித்து இரண்டாவது முறையாக ஆரஞ்சு கேப் வென்றார். இதில், ஒற்றுமை என்னவென்றால், வார்னர் முதல்முறையாக ஆரஞ்சு கேப் வென்ற சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிதான் இம்முறையும் சாம்பியன் பட்டம் வென்றது.
2018 – கேன் வில்லியம்சன்
சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய சீசன் இது. இந்த சீசனில் ஐதராபாத் அணிக்கு தலைமையேற்று இறுதிப்போட்டிவரை கொண்டுசென்ற கேன் வில்லியம்சன், 735 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் முதல் நியூசிலாந்து வீரராக ஆரஞ்சு கேப் வென்றார். இறுதிப்போட்டியில், ஷேன் வாட்சனின் அபார சத்தத்தால் சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

2019 – டேவிட் வார்னர்
ஹிஸ்டரி ரிபீட் அகைன். இந்த சீசனில் 69.20 சராசரியுடன் 12 போட்டிகளில் 692 ரன்கள் அடித்த வார்னர் மூன்றாவது முறையாக ஆரஞ்சு கேப் வென்றார். மறுபக்கம், கடந்த இரண்டு முறை வார்னர் ஆரஞ்சு கேப் வென்றபோது சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிதான் இந்த சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்றது.
2020 – கே.எல்.ராகுல்
இந்த சீசனில் ஒற்றை ஆளாக பஞ்சாப் அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த கேப்டன் கே.எல்.ராகுல், 670 ரன்கள் குவித்து முதன்முறையாக ஆரஞ்சு கேப் வென்றார். ஆனாலும், இந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட பஞ்சாப் அணி முன்னேறவில்லை. அதேசமயம், ஒற்றைப்படை ஆண்டுகளில் மட்டும் கோப்பை வெல்லும் என்ற லாஜிக்கில்லாத வாதத்தை இந்த சீசனில் கோப்பை வென்று தகர்த்தது மும்பை அணி.

2021 – ருத்துராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக, சாம்பியன் பட்டம் வென்ற அணியின் வீரரே ஆரஞ்சு கேப் வெல்வது இந்த சீசனில் நிகழ்ந்தது. சென்னை அணி நான்காவது முறையாகச் சாம்பியன் பட்டம் வெல்ல, 635 ரன்களுடன் முதல்முறையாக ஆரஞ்சு கேப் வென்றார் ருத்துராஜ் கெய்க்வாட்.
2022 – ஜாஸ் பட்லர்
இந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் அதிரடி வீரராக ஜொலித்த ஜாஸ் பட்லர், 863 ரன்கள் குவித்து முதல் இங்கிலாந்து வீரராக ஆரஞ்சு கேப் வென்றார். இந்த சீசனில்தான் 2008-க்குப் பிறகு முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான். ஆனால், புதிதாக அறிமுகமான குஜராத் அணியுடன் இறுதிப்போட்டியில் தோற்று சாம்பியன் பட்டத்தைப் பெறத் தவறவிட்டது.

2023 – சுப்மன் கில்
2022-ல் அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் அணி, இந்த சீசனிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியின் இறுதி ஓவரில் ஜடேஜா என்ற ஒற்றை வீரரால் 5-வது முறையாக சென்னை அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. இருப்பினும், குஜராத் வீரர் சுப்மன் கில் 890 ரன்களுடன் ஆரஞ்சு கேப் வென்றார்.
2024 – விராட் கோலி
இந்த சீசனில் முதல் பாதி முடிவில் இனி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற நிலையிலிருந்த பெங்களூரு அணி, இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனாலும், பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும், 741 ரன்களுடன் இரண்டாவது முறையாக ஆரஞ்சு கேப் வென்றார் விராட் கோலி. இதன்மூலம், அதிமுறை ஆரஞ்சு கேப் வென்ற பெங்களூரு வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

இதற்கு முந்தைய சீசன்களில், ஷான் மார்ஷ் (2008), மேத்யூ ஹைடன் (2009), சச்சின் டெண்டுல்கர் (2010), கிறிஸ் கெயில் (2011, 2012), மைக் ஹஸ்ஸி (2013), ராபின் உத்தப்பா (2014) ஆகியோர் ஆரஞ்சு கேப் வென்றனர். மொத்தமாக இதுவரை நடந்து முடிந்த 17 சீசன்களில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 3 முறை ஆரஞ்சு கேப் வென்றிருக்கிறார். ஆனாலும், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் வார்னர் அன்சோல்ட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
