பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புனிததலம் தான் மணிகரண். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. வெந்நீர் ஊற்றில் இயற்கையாகவே தண்ணீர் சூடாக கொதித்துக் கொண்டே இருக்குமாம்.
இதனைப் பார்க்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த நகரத்திற்கு வருகை தருகின்றனர். இந்த இடம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மணிகரண் என்பது இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கான ஒரு புனித யாத்திரை மையமாகும்.
இது இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மேலும் மணாலியில் இருந்து வெறும் 80 கி.மீ தொலைவில் இது உள்ளது. மணாலி மற்றும் குலுவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மணிகரண் மற்றும் அதன் வெந்நீர் ஊற்றுகள் ஈர்க்கிறது.
இந்த இயற்கை வெந்நீர் ஊற்றுகளுக்கு சில புராணங்கள் கூறப்படுகிறது.
இந்துக்களின் நம்பிக்கை
இந்துக்களின் நம்பிக்கைக்கு ஒரு புராணம் கூறப்படுகிறது. சிவன் மற்றும் பார்வதி தேவி வானில் வலம் வரும்போது, மலைகளால் சூழப்பட்ட பசுமையான ஒரு இடத்திற்கு வருகின்றனர். அந்த இடத்தின் அழகாக ஈர்க்கப்பட்ட அவர்கள் சிறிது காலம் அங்கே செலவிட முடிவு செய்தன. அவர்கள் அந்த இடத்தில் பல ஆண்டுகள் கழித்ததாக நம்பப்படுகிறது.
அங்கே தங்கி இருந்தபோது பார்வதி தேவி தனது மணிமாலையை நீரோடையில் தவற விட்டிருக்கிறார். இதனை மீட்டு தருமாறு சிவபெருமானிடம் பார்வதி தேவி கூறியுள்ளார்.
மணிமாலையை மீட்டெடுக்க உதவியாளரிடம் கட்டளையிட்டார் சிவபெருமான். ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் பிரபஞ்சத்தில் பின்விளைவுகள் ஏற்பட்டன.

சிவனை சமாதானப்படுத்த பாம்பு கடவுளான சேஷ்னாக்கிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சத்தமிட்டு அங்கு இருக்கும் தண்ணீர் ஊற்று சூடாகி கொதிக்க ஆரம்பித்தது, அதன் பின்னர் அந்த பகுதி முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மணிமாலை மீட்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
சீக்கியர்களின் நம்பிக்கை
சீக்கியர்களின் கூற்றுப்படி, குருநானக் தேவ்ஜி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் மணிகரணுக்கு விஜயம் செய்ததாகவும், அவரது வருகையின் போது, பசித்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு சமைக்க விரும்பினார் என்றும், ஆனால் அங்கு எந்த நெருப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தபோது, அந்த நீரூற்று ஒரு வெந்நீர் ஊற்றாக மாறியதாக இவர்கள் நம்புகின்றனர்.
மணாலி மற்றும் குலு ஆகிய குளிர் பிரதேச இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மணிகரணில் இருக்கும் வெந்நீர் ஊற்று, அதன் வெப்பம் காரணமாக ஈர்க்கிறது. இயற்கையாகவே கொதித்துக் கொண்டிருக்கும் இந்த வெந்நீர் ஊற்றில் சமையல் செய்து அதனை யாத்திரிகளுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
ஒரு சோதனை புவி வெப்ப சக்தி ஆலையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.