Virat Kohli, MS Dhoni : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இப்போது ஐபிஎல் 2025 தொடருக்கான ஜூரம் தொடங்கிவிட்டது. சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் எல்லோரும் வரிசையாக ஐபிஎல் அணிகளுடன் இணைந்து வருகின்றனர். விராட் கோலி ஆர்சிபி அணியுடன் இணைந்திருக்கிறார். அவர் அந்த அணிக்கான பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக தோனி கேப்டனாக இருக்கும்போது தான் ஐடியாக்களை கூறியபோது என்னை பைத்தியம் என நினைத்திருக்கக்கூடும் என்றும் கலகலப்பாக பேசியுள்ளார்.
அந்த பாட்காஸ்டில் விராட் கோலி பேசும்போது, ” தோனி கேப்டனாக இருக்கும்போது, நான் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்தேன். அப்போது ஒவ்வொரு பந்துகளுக்கு இடைவெளியிலும் அவரின் காதுகளுக்கு அருகில் சென்று என்னுடைய ஐடியாக்களை கொடுப்பேன். இந்த பந்தில் பீல்டர்களை லெக்சைடில் மிட்விக்கெட், ஸ்டெய்ட் லாக் ஆன் திசையில் பீல்டரை செட் செய்து போட வைத்தால் நிச்சயம் நமக்கு விக்கெட் கிடைக்கும் என கூறுவேன். தோனி என்னை அப்படியே பார்ப்பார். எல்லா நேரமும் என்னுடைய ஆலோசனையை அவர் ஏற்கமாட்டார். ஒரு கேப்டனாக ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை.
அடிக்கடி நான் அப்படி செய்து கொண்டே இருப்பேன். அப்படியான சமயங்களில் தோனி என்னை பைத்தியக்காரன் என்று கூட நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதை எதையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார்” என கலகலப்பாக பேசியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய விராட் கோலி, “இப்போதைக்கு அப்படியான முடிவுகள் எதையும் நான் எடுக்கவில்லை. நான் இன்னும் கொஞ்ச நாட்கள் விளையாட விரும்புகிறேன். இப்போதைக்கு எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டால் என்ன செய்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, ” உண்மையில் நான் என்ன செய்வேன் என்று எனக்கே சத்தியமாக தெரியவில்லை. இருந்தாலும் டிராவல் செய்வதை நான் மிகவும் விரும்பக்கூடியவன். அநேகமாக அதுவாக இருக்கலாம். ஆனால் என்ன என்று சொல்ல முடியவில்லை. பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு புதுக்கேப்டன் நியமனம் குறித்து பேசிய விராட் கோலி, ரஜத் படிதார் உண்மையில் திறமையான பிளேயர். அவருக்கு கீழ் நானும் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன். இந்த ஐபிஎல் சீசனும் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.