புதுடெல்லி: அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் பிரன்டன் டாரன்ட் என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 51 பேர் உயிரிழந்தனர். 89 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி ‘இஸ்லாமிய வெறுப்பு எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹரிஷ் பேசினார். அவர் கூறியதாவது:
இந்தியா பன்முகத்தன்மையின் பிறப்பிடமாக விளங்குகிறது. இந்து மதம், புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம் ஆகியவை எங்கள் நாட்டில் தோன்றின. இந்தியாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகில் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
தற்போது மத பாகுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இதன்காரணமாக உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முஸ்லிம் மதம் மட்டுமல்ல, எந்தவொரு மதத்தின் மீதும் பாகுபாடு காட்டக்கூடாது. இந்தியாவில் ஹோலி பண்டிகையும் ரம்ஜானும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இரு பண்டிகைகளையும் நாங்கள் போற்றி கொண்டாடுகிறோம். அனைத்து மதங்களையும் சமமாக மதித்து நடக்க வேண்டும். இதை அனைத்து உலக நாடுகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எந்தவொரு மதம், தேசம், இனத்தோடு தீவிரவாதத்தை தொடர்புபடுத்தக்கூடாது என்று தீர்மானத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானத்தை இந்தியா முழுமனதுடன் ஆதரிக்கிறது. இவ்வாறு ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹரிஷ் பேசினார்.
பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்: ஐ.நா. சபை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு செயலாளர் தாமினா ஜனுஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, காஷ்மீரையும் காசாவையும் ஒப்பிட்டுப் பேசினார். காஷ்மீரில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு இந்திய தூதர் ஹரிஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “பாகிஸ்தானின் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் மட்டுமே காஷ்மீர் பாதிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பாசிச மனநிலை அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.