பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கி இருந்தார். ‘சட்டப்பேரவையில் அதிமுகவினர் அதிக நேரம் பேச அப்பாவு அனுமதிப்பது இல்லை. அதிமுகவினர் பேசுவதை ஒளிபரப்புவது இல்லை. பாரபட்சத்துடன் செயல்படும் அவரை நீக்க வேண்டும்’ என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த 14, 15-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அந்த தீர்மானம் 17-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவில் அப்பாவு தெரிவித்தார் அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். தொடர்ந்து கேள்வி நேரம், நேரமில்லா நேரம் (ஜீரோ ஹவர்) இடம்பெறும். அப்போது, தனது தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு ஆர்.பி.உதயகுமார் கோரலாம். இல்லாவிட்டால், வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்குமாறு கோரலாம்.

தீர்மானம் உடனே எடுக்கப்பட்டால், பேரவை தலைவர் இருக்கையில் இருந்து அப்பாவு வெளியே சென்றுவிடுவார். அவையை பேரவை துணை தலைவர் அல்லது வேறொருவர் நடத்துவார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உதயகுமார் பேசுவார். அதற்கு முதல்வரோ, அவை முன்னவரோ பதில் அளிப்பார்கள். பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, பேரவை துணை தலைவர் தீர்ப்பளிப்பார். தீர்மானம் தோல்வி அடைந்தால் பேரவை தலைவர் அப்பாவு மீண்டும் இருக்கையில் அமர்ந்து அடுத்த அலுவல் நடவடிக்கைகளை தொடர்வார்.

சட்டப்பேரவையில் தற்போது திமுகவின் பலம் 133, அதிமுகவின் பலம் 66 ஆக உள்ளது. போதிய பலம் இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக கொண்டுவருவது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘பேரவை தலைவர் அனைவருக்கும் சமமானவர். அவர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளும்போது, ஜனநாயக முறைப்படி, சட்டம் அனுமதித்துள்ள வழியில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பு’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.