பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல். மேலும், இதில் மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“தனது உடல் முழுவதும் எங்கெல்லாம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முடியுமோ அதை ரன்யா ராவ் செய்துள்ளார். பேரவை கூடும் போது இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் குறித்த விவரத்தை நான் வெளியிடுவேன். இந்த கடத்தல் குறித்த முழு விவரத்தை நான் சேகரித்துள்ளேன்.
தங்கம் எப்படி வாங்கப்பட்டது. அதை ரன்யா ராவ் எப்படி கடத்தி வந்தார். சோதனை சார்ந்த விஷயங்களில் அவருக்கு யார் எல்லாம் உதவினார்கள் என்ற விவரம் என்னிடம் உள்ளது” என பசனகவுடா பாட்டீல் யத்னல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யா ராவை விசாரித்ததில் அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு நட்சத்திர விடுதியின் உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்தனர். இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.