அவுரங்கசீப் சமாதி விவகாரம்: நாக்பூரில் வன்முறை வெடித்தது; 15 போலீஸார் படுகாயம்

சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. இது தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. இதில், பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச் 26 வரை பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற வலியுறுத்தல் மீண்டும் எழுந்தது. இதற்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவாகப் பேசினார்.

இச்சூழலில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர் அவுரங்கசீப் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம் என்று தெரிவித்தனர். இதற்காக, விஎச்பி, பஜ்ரங்தளம் சார்பில் மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாக்பூரிலும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. போலீஸாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் 15 போலீஸார் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து பரவிய வதந்தியே இந்த மோதலுக்கு காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீஸார் நாக்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்தப் பிரச்சினையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அவுரங்சீப் சமாதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.